பீஹாரில் குட்ட பாபு என பெயரிட்டு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வினியோகம்: விசாரணைக்கு உத்தரவு

பாட்னா: பீஹாரில் நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கியுள்ள விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது.



பீஹாரில் புதிய வாக்காளர் திருத்தப்பட்டியல் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. மேலும் வாக்குரிமை பெற பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்பட 11 ஆவணங்கள் கட்டாயம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.


இந்த ஆவணங்களை போலியாக ஒருவர் பெற முடியும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந் நிலையில், ஒரு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பாட்னா அருகில் உள்ள மசாவுரி மண்டல அலுவலகம் இந்த சான்றிதழை வினியோகித்து உள்ளது. அந்த சான்றிதழில் டாக் பாபு(Dog babu) என்று நாயின் போட்டோ மற்றும் முகவரி இடம்பெற்றுள்ளன. மேலும், டாக் பாபுவின் தாய் மற்றும் தந்தை பெயர் குட்ட பாபு என்றும் சான்றிதழில் குறிக்கப்பட்டு உள்ளது.


இந்த சான்றிதழில் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரி முராரி சவுகான் என்பவரின் டிஜிட்டல் கையொப்பமும் இடப்பட்டுள்ளது தான் ஆச்சரியம்.


நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வினியோகிக்கப்பட்ட விவரமும், அந்த சான்றிதழும் இணையதளங்களில் வெளியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதை வழங்கியவர்கள் மீது உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

Advertisement