நான் ஓயப்போவதில்லை; எழுச்சிப்பயணம் தொடரும்: இபிஎஸ்

சென்னை: ''வானளாவிய வெற்றிபெற்ற எனது எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும்வரை நான் ஓயப்போவதில்லை,'' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை: டெண்டரே விடாமல் ரூ. 22 கோடிக்கு 2 விளம்பர ஏஜென்சிகளிடம் அரசு விளம்பரம் செய்யக் கொடுத்திருக்கிறது விளம்பர ஸ்டாலின் அரசு. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் 45 நாட்களுக்குள் 525 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள் என பெண்கள் மனு அளித்து வருகின்றனர்.

பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. முதல்வரின் Failure Model ஆட்சிக்கு குற்றங்களை கட்டுப்படுத்தத் தெரியவில்லை. நிர்வாகத் திறமையில்லாத அரசாக உள்ளது.

பொய் சொல்லி...!

திமுக கூறிய 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை, ஆனால், 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சைப் பொய் சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறது இந்த மக்கள் விரோத ஸ்டாலின் மாடல் அரசு. திமுக ஆட்சியில் சாமானியர்கள் வீடே கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களே மக்களை பாதுகாத்துக்கொள்ளும் போலீசாருக்கு பாதுகாப்பில்லை. அவலமான ஆட்சி. திமுக ஆட்சியில், புயல், மழை வெள்ளம் வந்தாலும் விவசாயிகள், பொதுமக்களைப் பார்ப்பதும் கிடையாது.


அதிமுக ஆட்சி

மக்கள் விரோத ஸ்டாலினின் Failure Model ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். திமுகவினர், மக்களிடையே ஓட்டு கேட்டுச் சென்றால், மக்களே அவர்களை விரட்டி அடிப்பார்கள். அந்த அளவிற்கு திமுக ஆட்சியின்மீது வெறுப்பில் உள்ளனர். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இந்த மோசமான தீய ஆட்சிக்கு முடிவுகட்டி நல்லாட்சியைத் தர வேண்டும் என என்னைச் சந்தித்த அனைவரும், என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.



ரிப்போர்ட் கார்டு

திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும் என்று அதிமுக சார்பில் புதிய பிரசார திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். திமுக ஆட்சியின் அவலங்களை ரிப்போர்ட் கார்டாக மக்கள் பூர்த்தி செய்து வழங்க உள்ளார்கள். மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியின் பொய்யான வாக்குறுதிகளையும், திறனற்ற ஆட்சியையும் கண்டு மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒவ்வொரு தமிழக மக்களும் முடிவு செய்துவிட்டார்கள். அதற்கான நாட்களையும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.


கொடுங்கோல் ஆட்சி

தமிழக மக்களின் உள்ளம் திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது. இந்தத் தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, கொடுமை பொறுக்க முடியாத குடிமக்கள் சிந்திய கண்ணீரே படைக்கருவியாக, ஆயுதமாக நின்று கொடுங்கோல் ஆட்சியை அழிக்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, மக்களுக்கு தீங்கிழைக்கும் ஆட்சியை அகற்றும். சொன்னதைச் செய்யாத, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத Failure Model ஸ்டாலின் அரசுக்கு மரண அடி கொடுப்போம்.



குடும்ப ஆட்சி

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.
வானளாவிய வெற்றிபெற்ற எனது எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும்வரை நான் ஓயப்போவதில்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement