அம்மாவுக்கு கருணை காட்டுங்க; நர்ஸ் நிமிஷா பிரியா மகள் உருக்கமான வேண்டுகோள்!

திருவனந்தபுரம்: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் 13 வயது மகள் மிஷெல், மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது தாயின் விடுதலைக்காக அதிகாரிகளிடம் மன்றாடுவதற்காக தனது தந்தை உடன் ஏமனுக்கு சென்றுள்ளார்.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 36. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, ஏமனில் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவரது கணவன் மற்றும் மகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.
தற்போது, கடைசி முயற்சியாக, நிமிஷா பிரியாவின் 13 வயது மகள் மிஷெல், தனது தாயின் விடுதலைக்காக அதிகாரிகளிடம் மன்றாடுவதற்காக தனது தந்தை உடன் ஏமனுக்கு சென்றுள்ளார். தனது தந்தை டோமி தாமஸ் மற்றும் குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் நிறுவனர் கே.ஏ. பால் ஆகியோருடன், மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது தாயாரின் சார்பாக கருணை கோருகிறார்.
மிஸ் பண்றேன்
மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் விடுத்து மிஷெல், வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
நான் உன்னை நேசிக்கிறேன் அம்மா. தயவுசெய்து என் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர உதவுங்கள். நான் அவளைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். நான் உன்னை மிஸ் செய்கிறேன் அம்மா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கணவனின் கோரிக்கை
இதற்கிடையில், நிமிஷா பிரியாவின் கணவர் டாமி தாமஸ், "தயவு செய்து என் மனைவி நிமிஷா பிரியாவைக் காப்பாற்றி, அவள் சொந்த ஊருக்குச் செல்ல உதவுங்கள்" என்று நேரடியாகக் கேட்டுக் கொண்டார். நிமிஷா பிரியாவின் ஒரே மகள் மிஷேல்.
பத்து ஆண்டுகளாக தாயை பார்க்காமல் இந்தியாவில் வசிக்கும் சிறுமி, தற்போது தந்தை உதவியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.





