போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: ஜெய்சங்கர் திட்டவட்டம்!

புதுடில்லி: ''பாகிஸ்தான் உடன் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. ஏப்.,22 முதல் ஜூன் 17 வரை, பிரதமர் மோடி அதிபர் டிரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை,'' என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
லோக்சபாவில் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து ஆளும் மத்திய அரசு சார்பிலும் எதிர்கட்சிகள் சார்பிலும் விவாதம் நடந்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
பாகிஸ்தானின் நீண்டகாலமாக பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதை சர்வதேச நாடுகளுக்கு அம்பலப்படுத்த இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானின் அத்துமீறல் வரலாற்றை எடுத்துக்காட்டியது மட்டுமில்லாமல், அதன் உண்மையான முகத்தை ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுத்து உலகிற்கு வெளிப்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டது.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் பாகிஸ்தானின் பங்கை உலக நாடுகள் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய வலுவான ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக எங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை நாங்கள் உலகத் தலைவர்களிடம் கூறினோம். எங்களை பாதுகாக்க எங்களுக்கு உரிமை உண்டு.
எல்லையைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் பதில் ஆபரேஷன் சிந்தூருடன் முடிவடையாது. எங்கள் குடிமக்களையும் நலன்களையும் பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுப்போம்.
தேசிய பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானியர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் தொடரும்.
சிந்துார் நடவடிக்கை தொடங்கியது முதல் பல்வேறு அழைப்புகளை நாங்கள் பேச வேண்டியிருந்தது. நான் 27 அழைப்புகளில் பேசினேன். பிரதமர் மோடி, 20 அழைப்புகளில் பேசினார். 35 முதல் 40 ஆதரவு கடிதங்கள் வந்திருந்தன.
நாம் சிந்துார் நடவடிக்கைக்கு ஆதரவான ஒரு கருத்தாக்கத்தை ராஜதந்திர செயல்பாடுகள் மூலம் உருவாக்க வேண்டியிருந்தது. ஐ.நா.,வில் இருக்கும் 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே சிந்துார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இப்போது தான் நாங்கள் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்துள்ளோம். அந்த நாடு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், இந்திய நிறுவனம் ஒன்றை, விமான நிலைய திட்டத்தில் இருந்து வெளியேற்றியது. அதே நாடு, இப்போது இரு விமான நிலையங்கள் அமைக்கும்படி இந்தியாவை வலியுறுத்துகிறது.
அமெரிக்காவுடன் நடந்த உரையாடல்களில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், சிந்துார் நடவடிக்கையுடன் வர்த்தகம் தொடர்புபடுத்தி பேசப்படவில்லை. ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் பேசிக்கொள்ளவே இல்லை.
மோடி சொன்ன பதில்
அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ் 9ம் தேதி போன் செய்து, பிரதமர் மோடியிடம் பேசினார். சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்தார். அதற்கு பிரதமர், 'அப்படி தாக்குதல் நடத்தினால், அதற்கு மிகச்சரியான பதிலடி தரப்படும்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதன்படி நமது ராணுவம் மிகச்சரியான பதிலடி கொடுத்தது. நமது தாக்குதல் மூலம் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளங்களின் படங்களை அனைவரும் பார்த்தனர். இதன் மூலம் நாம் சொன்னதை செய்து காட்டியுள்ளோம்.
பல நாடுகளின் தலைவர்கள் போன் செய்து, போர் நிறுத்தம் செய்வதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், நாங்கள், பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ., மூலம் வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே போர் நிறுத்தம் பற்றி பரிசீலனை செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தோம். அதன்படி தான் அவர்கள் டி.ஜி.எம்.ஓ., இந்திய டி.ஜி.எம்.ஓ.,விடம் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.








மேலும்
-
பணமூட்டை சிக்கிய விவகாரம் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் 'கிடுக்கி'
-
காட்டு யானைகள் தாக்கி கிராம மக்கள் பலி; கர்நாடகாவில் வனத்துறை அலுவலகம் முற்றுகை
-
'குத்தா பாபு'வின் மகன் 'டாக் பாபு' பீஹாரில் இருப்பிட சான்றால் சர்ச்சை
-
'ஆப்பரேஷன் சிந்துார்' விவாதம் காங்கிரசுக்கு 'நோ' சொன்ன தரூர்
-
பிரதமர் நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் சொதப்பல்; சைவ ஆதீனகர்த்தர்கள் கடும் கொந்தளிப்பு
-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாமல் அ.தி.மு.க., போஸ்டர்கள்