பிரதமர் நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் சொதப்பல்; சைவ ஆதீனகர்த்தர்கள் கடும் கொந்தளிப்பு
ராஜேந்திர சோழரின் ஆசியப் படையெடுப்பின் ஆ யிரமாவது ஆண்டு விழா, கங்கைகொண்ட சோழபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மத்திய கலாசாரத் துறையின் கீழ் தஞ்சையில் இயங்கிவரும் சவுத் ஜோன் கல்ச்சுரல் சென்டர்
என்ற அமைப்பு இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
ஆனால் இதில் பல சொதப்பல்கள் நடந்துள்ளதாக சைவத் துறவியர்கள் குமுறி வருகின்றனர்.
இது தொடர்பாக சைவத் துறவியர் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த பிரதான சைவ ஆதீனகர்த்தர்கள் உள்ளிட்ட 36 சைவத் துறவியர் அழைக்கப்பட்டனர். மேடை ப வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
பிரதமரின் வலப்பக்கத்தில் சைவ ஆதீனகர்த்தர்களும் இடப்பக்கத்தில் ஓதுவார்கள் மற்றும் இளையராஜா குழுவினரும் அமர்ந்திருந்தனர்.
நடுவில் பா.ஜ., மூத்த தலைவர்கள் தனி வரிசையிலும் அவர்களுக்குப் பின் பொதுமக்கள், கட்சியினரும் அமர்ந்திருந்தனர்.
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, சைவ ஆதீனகர்த்தர்களும் மற்ற துறவியரும் காலை 8.30 மணிக்கே வரவழைக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.
அவர்களுடன் குடிநீர் பாட்டில் உள்ளிட்ட எந்தப் பொருளையும் எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை.
துறவியர் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களில் பாதி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களும் கூட. எனவே, நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்.
இந்தச் சூழலில் அவர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. பிற்பகல் 2:30 மணிக்கு பிரதமர் மேடைக்கு வந்தார்; 3:30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது.
தண்ணீர் அருந்தாமல் பிரதமர் புறப்பட்டுச் சென்ற பின்னர் தான், அனைவரும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். மாலை 4:00 மணிக்கு மேல் தான் சைவ ஆதீனகர்த்தர்கள் உள்ளிட்ட
சைவத் துறவியர் வெளியேறினர்.
காலையில் இருந்து தண்ணீர் கூட அருந்தாமல் காத்துக் கிடந்ததால், குன்றக்குடி குருமகா சந்நிதானம், மதுரை குருமகா சந்நிதானம் உள்ளிட்ட வயதான ஆதீனகர்த்தர்கள் கடுமையாக சோர்வடைந்தனர். மதுரை ஆதீனகர்த்தர் சமீபத்தில் தான் அறுவை சிகிச்சையும் செய்திருந்தார்.
இதற்கிடையே, கீழே முன் வரிசையில் அமர்ந்திருந்த பா.ஜ., மூத்த தலைவர் ராஜா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் வரிசைகளிலும், பத்திரிகையாளர்கள் பகுதியிலும் கூட குடிநீர் வசதி இல்லாததால், அவர்களும் தவியாய் தவித்தனர்.
குடிநீர் இருக்கிறதா என்று துறவியர் இருந்த மேடை நோக்கி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஏ.சி.சண்முகம் மயக்க நிலைக்கு சென்றுவிடவே, அங்கிருந்த ஒருவரிடம் பிரட் வாங்கி சாப்பிட்டு சற்று தேற்றிக் கொண்டார். எனினும் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளானார்.
ஒவ்வொரு சைவ ஆதீனகர் த்தரையும் நேரில் சென்று அழைத்த சவுத் ஜோன் கல்ச்சுரல் சென்டர் நிர்வாகிகள், பிரதமர் மேடை ஏறிய உடன், சைவத் துறவியரிடம் ஆசீர் வாதம் வாங்கிக் கொள்வார் என்றும், அதன் பின்னரே நிகழ்ச்சி துவங்கும் என்றும் கூறியிருந்தனர்.
ஏமாற்றம் ஆனால், நிகழ்ச்சி துவங்கி முடியும் வரை, சைவ ஆதீனகர்த்தர்களிடம் பிரதமர் ஆசி வாங்க செல்லவில்லை. அவருக்கு ஆசி வழங்கி நினைவுப் பரிசுகளை வழங்கலாம் என்ற ஆவலோடு காத்திருந்த சைவ ஆதீனகர்த்தர்கள் இறுதியில் ஏமாற்றமடைந்தனர்.
பிரதமர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு, சைவ ஆதீனகர்த்தர்களுக்கான மரபும் மரியாதையும் முக்கியம் என்பதை யாரும் உணரவில்லை. இனியாவது இப்படிப்பட்ட குளறுபடிகளை கலாசாரத் துறை தவிர்க்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
@block_B@
தஞ்சாவூர் கலாசார மையத்தின் நிகழ்ச்சி செயற்பாட்டாளர் உமாபதி கூறியதாவது; யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என, பல நாட்கள் ஆலோசித்து, திட்டமிட்டு நிகழ்ச்சிக்கு வந்தோரை கலாசாரத் துறை சார்பில் அழைத்தோம். அதில், தமிழகத்தின் பிரதானமான ஆதீனகர்த்தர்களும் ஓதுவார்களும் அடங்குவர். அவர்கள் முறையாகவே அழைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றதால், பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. போலீசார், தண்ணீர் பாட்டிலைத் தவிர, வேறு எதுவும் நிகழ்ச்சி நடந்த இடத்துக்குள் கொண்டு செல்லக்கூடாது என தடை போட்டு விட்டனர். அதனால் பல மணி நேரம், நிகழ்ச்சிக்காக ஓரிடத்தில் உட்கார வைக்கப்பட்ட ஆதீனகர்த்தர் களும் ஓதுவார்களும் சில சங்கடங்களை எதிர்கொண்டனர். பாத்ரூம் பக்கம் கூட போக யாரையும் விடவில்லை. வந்திருந்த அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டது. சங் கடங்கள் எதுவுமின்றி, எல்லோருக்கும் சவுகரியமாக நிகழ்ச்சியை நடத்தத்தான் முயன்றோம். இருந்தும் சில அசவுகரியங்கள் ஏற்பட்டு விட்டன. வருங்காலங்களில் இதில் கவனமாக இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.block_B
- நமது நிருபர் -

மேலும்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு
-
கடலுார் சுமங்கலி சில்க்சில் ஆடி தள்ளுபடி விற்பனை
-
மொளசூர் மகா பெரியவா நகர் அக்ரஹாரம் பிளாட் வாங்குவோருக்கு ஆடி சிறப்பு தள்ளுபடி
-
முன்னாள் ஊராட்சி தலைவர் மீது கலெக்டரிடம் ஊழல் புகார்
-
நீதிபதியை விமர்சித்த வக்கீலுக்கு எதிராக நடவடிக்கை: தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு