மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு கடல் போல காட்சி அளிக்கும் காவிரி ஆறு

கரூர், மாயனுார் கதவணைக்கு, நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக, காவிரி ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
கரூர் மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 25 ஆயிரத்து, 636 கன அடி தண்ணீர்
வந்தது. நேற்று மதியம், 2.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 7,000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 5,600 கன அடி தண்ணீரும், பாசன வாய்க்காலில், 1,400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அகண்ட காவிரியில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது காவிரி ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. கரூர் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் காவிரியாற்று பகுதிகளுக்கு, பொதுமக்கள் செல்வதை தடுக்க வருவாய்த் துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 3,441 கன அடி தண்ணீர் வந்தது.
அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,308 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பாசன வாய்க்கால்களில், 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 87.80 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.77அடியாக இருந்தது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 19.52 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு, 108 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement