ஹிந்துக்களுக்கு எதிரான தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய வேண்டும் எச்.ராஜா ஆவேசம்

மதுரை: 'ஹிந்துக்களுக்கு எதிரான தி.மு.க., ஆட்சியை மக்கள் துாக்கி எறிய வேண்டும்' என மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசினார்.

மதுரை ஆதினம் மற்றும் ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., அரசு செயல்படுவதாகக் கூறி, அதனைக் கண்டித்து மதுரை நகர் பா.ஜ., சார்பில் ஜான்சி ராணி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் மாரிசக்கரவர்த்தி தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர்கள் ராஜசிம்மன், சிவலிங்கம், மாநில மீனவரணி நிர்வாகி சிவபிரபாகர், பொதுச் செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.

தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசியதாவது: தி.மு.க., அரசு தொடர்ச்சியாக ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஹிந்து விரோத தீய அரசான தி.மு.க.,வில் ஹிந்துக்கள் இருக்கக் கூடாது. பிரதமர் மோடி தமிழகம் வந்தால் முதல்வருக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. அவர் டில்லி சென்றவுடன் காய்ச்சல் குறைந்துவிட்டது. தி.மு.க., குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வதுதான் எங்களின் முக்கிய கடமையாக உள்ளது.

தி.மு.க., அரசு மோடியை பார்த்து பயந்துபோய் இருக்கிறது. மதுரையில் ஒழுக்கமாக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி இருக்கிறோம். ஆனால் தி.மு.க.,வினரால் அதுபோன்ற மாநாட்டை நடத்த முடியாது. ஹிந்து சமுதாயத்தை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாம் என்று தி.மு.க., நினைத்துக் கொண்டிருக்கிறது.

அதற்காக போலீசை கையில் எடுத்துள்ளனர். திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற கோயில் ஊழியரை போலீசாரே அடித்துக் கொலை செய்துள்ளனர். நேர்மையாக பணியாற்றிய டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதுபோன்று ஹிந்துக்களுக்கு எதிராகவும், நேர்மையாக இருப்போருக்கு எதிராகவும் தி.மு.க., செயல்பட்டு வருகிறது.

எனவே ஒரு ஹிந்துகூட தி.மு.க.,வுக்கு ஓட்டு அளிக்கக் கூடாது. அவர்களை தேர்தல் மூலம் துாக்கி எறிய வேண்டும். ஹிந்து மதத்தை அழிப்பதே தி.மு.க.,வின் வேலையாக உள்ளது. எனவே ஹிந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement