நிலத்தடி கேபிள் திட்டம் குறைந்தது மின் இழப்பு

பெங்களூரு: நிலத்தடியில் மின்சார கேபிள்களை பொருத்திய பின், மின் இழப்பு குறைந்துள்ளது.

இதுகுறித்து, பெஸ்காம் அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் 2019 - 20ல், மின் கம்பங்கள் வழியே செல்லும் மின்சார கேபிள்களை, நிலத்தடியில் புதைக்கும் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளது.

நகரில் கேபிள் மாற்றும் பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளன. இதன் பயனாக மின் இழப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

இதுவரை 7,030.33 கி.மீ., நீளத்திற்கு, 11 கே.வி., திறன் கொண்ட மின் கம்பிகள், நிலத்தடிக்கு மாற்றப்பட்டன. 5,818.35 கி.மீ., நீளத்திற்கு குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின் கம்பிகள், நிலத்தடியில் புதைக்கப்பட்டன. இதற்காக 5,031.65 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

நிலத்தடியில் மின் கம்பிகளை புதைக்கும் பணி துவங்கிய பின், மின் திருட்டும் குறைந்துள்ளது. டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்துவதால், மின் இழப்பை கட்டுப்படுத்த முடிகிறது.

பெங்களூரில் மட்டுமின்றி, கிராமப்பகுதிகளிலும் நிலத்தடி கேபிள்களாக மாற்றும் பணிகள் நடந்தால், மின் இழப்பு மற்றும் திருட்டை கட்டுப்படுத்தலாம். மின் விபத்துகளையும் தடுக்க, இத்திட்டம் உதவுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement