கிராமத்து குழந்தைகளும் சாஸ்திரீய இசை கற்கலாம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், சமனுார் கிராமத்தில், 'ஸ்வரசாதனா தபோவனம்' என்ற குருகுலப் பள்ளியில், அங்குள்ள சுற்று வட்டாரத்தில், 50ம் மேற்பட்ட கிராமப்புற குழந்தைகளுக்கு சாஸ்திரீய இசை இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.


டாக்டர் சங்கீதா சங்கர் என்பவர் இந்த குருகுல வழி பள்ளியை நிறுவியுள்ளார். ஜனபனுார், சமனுார், கொக்கிகல், பாதகந்தஹள்ளி, மரந்தஹள்ளி ஆகிய ஊர்களிலிருந்து குழந்தைகள் இங்கு இசை கற்க விரும்பி சேர்ந்துள்ளனர்.


இசை வல்லுார் ஆர்.கே.கோவிந்தராஜன் தலைமையில் இசை பயிற்றுவிக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் குழந்தைகள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். 'மைக்'கில் பாடும் புது அனுபவத்தில் குழந்தைகள் பரவசமடைந்ததை பார்த்து, ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்.


சங்கீதா சங்கரின் குடும்பத்தினராக, அவரது பேத்திகள் ராகினி, நந்தினி ஆகியோர் குழந்தைகளுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.




மேலும், கர்நாடக பியூஷன் செய்யும் மகேஷ் ராகுவன், தானும் பாடி, குழந்தைகளையும் பாட வைத்து மகிழ்ந்தார். 'தகதிமி' போன்ற கொன்னக்கோல் இசைப்பு முறையும் குழந்தைகளுக்கு கற்றுத் தரப்பட்டது. அக் ஷய் பத்மநாபன் என்பவர் இதை பயிற்றுவித்தார்.



ஸ்வர-சாதனா தபோவனம் மற்றும் அதன் திட்டங்கள் பற்றி மேலும் தகவல்களுக்கு அல்லது இந்த உன்னத முன்முயற்சிக்கு ஆதரவளிக்க, ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகள், தமிழகம், தர்மபுரி மாவட்டம், சமனுார் கிராமத்தில் உள்ள இந்த இசை சிறப்பு கலங்கரையை பார்வையிட ஊக்குவிக்கப்படுகின்றனர்.

Advertisement