பயணியர் ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி

பெர்லின்; ஜெர்மனியில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்த ரயில் தடம் புரண்டதில் ரயில் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர். நிலச்சரிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், சிக்மரிங்கன் நகரில் இருந்து உல்ம் நகருக்கு, பயணியர் ரயில் சென்று கொண்டிருந்தது.

ரீட்லிங்கன் என்ற இடத்திற்கு அருகே வனப்பகுதி வழியாக சென்றபோது ரயில் திடீரென தடம்புரண்டது. ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு மரங்கள் மீது மோதின. இதனால் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதம் அடைந்தன. தண்டவாளத்தின் சில பகுதிகளும் துண்டிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டன.

இந்த விபத்தில், ரயிலின் ஓட்டுநர், ஒரு ஊழியர் மற்றும் ஒரு பயணி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த, 41 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் கூறினர். மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணி நடைபெற்றது.

கனமழை காரணமாக அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement