போர் விமானிகளின் கைகளை கட்டிப்போட்டு விட்டீர்கள்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ''ஆபரேஷன் சிந்துாரில் ஈடுபடுத்தப்பட்ட போர் விமானிகளின் கைகளை கட்டிப் போட்டு விட்டீர்கள். முழு சுதந்திரம் கொடுக்கவில்லை,'' என லோக்சபாவில் ராகுல் குற்றம் சாட்டினார்.
அரசுக்கு ஆதரவு
' ஆபரேஷன் சிந்தூர்' மீதான நடவடிக்கையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது: பஹல்காமில் கொடூரமான தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தியது பாகிஸ்தான். இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தோம். ஆபரேஷன் சிந்தூர் துவக்கிய உடனும், அதற்கு முன்னரும், எதிர்க்கட்சிகள் அனைத்தும், ஆயுதப்படைகளுக்கும், அரசுக்கும் உறுதியாக ஆதரவு தெரிவித்தன
எந்த ஒரு ராணுவ வீரருடன் நான் கை குலுக்கும்போது எல்லாம், அந்த வீரரை நாட்டுக்காக போராட தயாராக இருக்கும் புலியாக இருக்கிறேன். ஆனால், புலிக்கு முழு சுதந்திரம் தேவை. அவற்றை கட்டிப்போடக்கூடாது. இரண்டு முக்கிய வார்த்தைகள் உள்ளன. அரசியல் உறுதி மற்றும் நடவடிக்கையில் சுதந்திரம்.
கண்டனம்
இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், முதலில் 100 சதவீதம் அரசியல் உறுதி இருக்க வேண்டும்.
நான் ராஜ்நாத் சிங்கின் பேச்சை உன்னிப்பாக கவனித்தேன். அவர், ஆபரேஷன் சிந்தூர் அதிகாலை1:05 மணிக்கு துவங்கி, 22 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவித்தார். பிறகு, மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை தெரிவித்தார். அவர், ' நாம் பாகிஸ்தானை அதிகாலை1: 35 மணிக்கு அழைத்து, பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. ராணுவம் இல்லாத இடங்களை மட்டுமே குறிவைத்தோம் எனக்கூறியதாக ' இங்கு தெரிவித்தார். ஒரு வேளை அவர் என்ன வெளிப்படுத்தினோம் என்பதை அவருக்கு தெரியாமல் இருக்கலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என பாகிஸ்தானிடம் அவர் கூறியுள்ளார்.
ஒப்பீடு
நேற்று ராஜ்நாத் சிங், 1971ம் ஆண்டு நடந்த போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் ஒப்பிட்டு பேசினார். அப்போது இந்தியப் பெருங்கடல் வழியாக அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பிரிவு நெருங்கிக் கொண்டு இருந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா, வங்கதேசத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.எங்கு செல்ல வேண்டுமோ செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
ராணுவ தளபதி ஜெனரல் மானெக்ஷாவிடம் 6 மாதங்கள், 1 வருடம் உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சுதந்திரம் உள்ளது என இந்திரா தெரிவித்தார். ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது.
நீங்கள் பாகிஸ்தானுக்குள் சென்றீர்கள். பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை தாக்கவேண்டாம் என சொல்லி விமானிகளின் கைகளை நீங்கள் கட்டிப் போட்டு விட்டீர்கள்.
உறுதி வேண்டும்
நமது படைகள் திறமையாக செயல்பட, அவர்களுக்கு அரசியல் உறுதியும், சுதந்திரமும் தேவைப்படுகிறது. இந்திய ஆயுதப்படைகளை களமிறக்க விரும்புபவர்கள், அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் மற்றும் வலிமையான அரசியல் உறுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
@block_B@இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட நான் தான் காரணம் என டிரம்ப் 29 முறை சொல்லி உள்ளார். அவர் பொய் சொல்கிறார் என்றால், டிரம்ப் சொல்வது பொய் என பிரதமர் மோடி இந்த அவையில் தெளிவாக கூற வேண்டும். இந்திராவின் தைரியம் அவருக்கு இருந்தால், அவர் தைரியமாக எழுந்து, 'டிரம்ப நீங்கள் பொய் சொல்கிறீர்கள்' எனக்கூற வேண்டும். block_B
தோல்வி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த அவையில் நான் சொல்லியதை பார்த்து சிரித்தீர்கள். பாகிஸ்தானையும், சீனாவையும் தனித்தனியாக வைத்து இருப்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு மிகப்பெரிய சவால் எனத் தெரிவித்தேன். ஆனால், நாம் தோல்வியடைந்துவிட்டோம். அவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே போரிட்டு கொண்டு இருக்கிறோம் என இந்திய அரசு நினைக்கிறது. ஆனால், அவர்கள் வந்த பிறகு தான், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக போரிடுகிறோம் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் கடற்படை சீனாவுடன் கூட்டணி அமைத்துள்ளன. பாகிஸ்தான் விமானப்படையின் கோட்பாடு முற்றிலும் மாறிவிட்டது. மேலும் பாகிஸ்தானுக்கு தேவையான செயற்கைக்கோள் தரவுகள் உள்ளிட்ட போர்க்கள தகவல்களை சீனா அளித்து வருகிறது.
நாடு மேலானது
பெரிய சக்திகள் சண்டையிடும் போர்க்களமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்கக்கூடாது. நாம் கவனமாக செயல்பட்டு நமது நலன்களை பாதுகாக்க வேண்டும். இரண்டாவதாக, இந்த நாடு உங்களின் பிம்பத்துக்கும், பிஆர்க்கும் மேலானது நாடு. இதனை அவர் புரிந்து கொள்வதுடன், அற்ப அரசியல் விளையாட்டுகளுக்காக ஆயுதப்படைகளையும, நாட்டின் நலன்களையும் தியாகம் செய்யாதீர்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.









