நிலத்தில் புதைக்கப்படாத மின் வடம் கரையான்சாவடியில் விபத்து அபாயம்

பூந்தமல்லி, கரையான்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில், நிலத்தில் புதைக்கப்படாமல் சாலையோரம் செல்லும் மின் வடத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.

பூந்தமல்லி அருகே, கரையான்சாவடி - ஆவடி சாலையில், கனரக வாகனங்கள் அதிகம் செல்கின்றன. மேலும், ஏராளமான பயணியர், பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகளை பிடித்து செல்கின்றனர்.

இந்ந்நிலையில், கரையான்சாவடி பேருந்து நிறுத்தத்தில், சாலையோரம், 200 மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் புதைக்கப்பட வேண்டிய உயர் அழுத்த மின் வடம், புதைக்கப்படாமல் சாலையோரம் செல்கிறது.

இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:

உயர் அழுத்த மின் வடத்தை, சாலையோரம் நிலத்திற்கு அடியில் புதைக்காமல், மின் வாரியத்தினர் அலட்சியமாக பணி செய்துள்ளனர். ஜே.சி.பி., லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், இதன் மீது ஏறினால், சேதமடைந்து பெரும் மின் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.

இதே பகுதியில், பூந்தமல்லி துணை மின் நிலையம் உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த மின் வடம் அருகே, நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன், இந்த மின் வடத்தை நிலத்திற்கு அடியில் புதைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

Advertisement