கிராமத்து டீக்கடைகளுக்கும் லைசென்ஸ் வாங்க வைத்தது தி.மு.க., அரசு: பழனிசாமி சாடல்

காரைக்குடி; 'கிராமத்தில்,டீக்கடை, தையல் கடை,சலவை கடை, பெட்டி கடை வைத்தால் கூட லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று அறிவித்து மக்களிடம் வசூலிக்கின்றனர்' என அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். -
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற இரண்டாம் கட்ட பிரசாரத்தை துவக்கி பழனிசாமி பேசியதாவது:
காரைக்குடி மேயரை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. நகராட்சிக்கு சொந்தமான இடங்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு பல ஆண்டுகளுக்கு மேயர் குத்தகைக்கு விட்டுள்ளார். ரூ. 30 கோடிக்கு பணி ஒதுக்கியுள்ளார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தி தீர்வு காணப்படும்.
தி.மு.க., கொடுத்த 525 வாக்குறுதியில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. அடுத்து தேர்தல் வருவதால் மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக தெரிவிக்கின்றனர். தேர்தலுக்காக பெண்களை ஏமாற்றும் செயல்.
எந்த வரியும் உயர்த்த மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் கடைக்கு 150 சதவீத வரி, வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்த்தி விட்டனர். குப்பைக்கு கூட வரி போடும் அரசு தி.மு.க., அரசு.
மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால் இந்த ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. 3 ஆண்டுக்கு முன்பே 52 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். இதுவரை 67 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தி விட்டனர்.
மின் கட்டண உயர்வால் நம் மாநிலத்திற்கு வரவேண்டிய தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று விட்டன. தி.மு.க., அரசின் ஆட்சி முடியும்போது ரூ. 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் சுமை இருக்கும்.
கொள்ளை அடிப்பதில் முதல் மாநிலமாக இருப்பது தமிழ்நாடு.
தற்போது, கிராமங்களில் உள்ள தோட்டத்து வீடுகள் அனுமதி இல்லாமல் கட்டியிருந்தால் சீல் வைக்கலாம் என்று அறிவித்துள்ளனர். வீடு கட்டியவர்கள் எப்படி அனுமதி பெறுவார்கள். மேலும், கிராமத்தில்,டீக்கடை, தையல் கடை,சலவை கடை, பெட்டி கடை வைத்தால் கூட லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அரசு ஊழியரை எதற்காக பயன்படுத்தி அரசு பணத்தை வீணடிக்கின்றனர்.
ஊசலாடும் உயிருக்கு வென்டிலேட்டர் வைப்பது மாதிரி தான் தி.மு.க.,விற்கு உங்கள் ஸ்டாலின் நிகழ்ச்சி. முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்கள். நான் கூட வருத்தப்பட்டேன். ஆனால் அங்கு டேபிள் போட்டு டைரக் ஷன் செய்கிறார். தற்போது, தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க தி.மு.க.,வினர் வரிசை கட்டி சென்றனர். நாம் சென்றால் கதவை தட்டுவதாக சொல்கின்றனர்.
அவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கூட்டணி. நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கூட்டணி. பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் வேண்டும் என்று விவசாயிகளை அலைக்கழித்தனர். இதுகுறித்து நாங்கள் பிரதமரிடம் முறையிட்டோம். அதனால், பயிர் கடன் குறித்த புதிய அறிவிப்பை தி.மு.க., ரத்து செய்தது. தி.மு.க., கூட்டணி ஊசலாடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பலுான் பறக்க எதிர்ப்பு திருப்புத்துாரில் பழனிசாமி வருகையை முன்னிட்டு ஜூலை 26 முதல் அண்ணாதுரை சிலை அருகிலுள்ள கட்டடத்தின் மேல்மாடியில் பலுான் பறக்க விடப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.,உமாதேவன் இந்த பலுானை வைத்துள்ளார். அனுமதியில்லை என்று கூறி இந்த பலுான் அவிழ்க்கப்பட்டது. நேற்று மீண்டும் பலுான் பறக்க விடப்பட்ட நிலையில் காலை 10:00 மணிக்கு அனுமதியில்லை என்று இந்த பலுானை அகற்ற பேரூராட்சி பணியாளர்கள் போலீசாருடன் வந்தனர்.இதற்கு உமாதேவன் எதிர்ப்பு தெரிவித்தார்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் ஏற்கவில்லை. துணை முதல்வர் வருகையின் போது பலுான் வைக்கப்பட்டது. முன்னாள் முதல்வருக்கு வைப்பதில் அனுமதிக்க கூடாதா என்று எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து மாடியிலிருந்து உமாதேவன் இறங்க மறுத்த நிலையில் பாதுகாப்புக்கு சில போலீசாரை மாடியில் நிறுத்தி விட்டு மற்றவர்கள் மாடியிலிருந்து கீழிறங்கும் வாசலை பூட்டி அங்கும் போலீசாரை நிறுத்தினர். கடும் எதிர்ப்பு காரணமாக கடைசி வரை பலுானை கழற்ற முடியவில்லை.

மேலும்
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி
-
1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்