ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,விடம் ரூ.11 லட்சம் நுாதன மோசடி

1

அரக்கோணம்; ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,விடம், ஏ.டி. எம்., கார்டை மாற்றி கொடுத்து, 11 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மணவூரை சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., ஆனந்தன், 65. ஜூலை, 15ல் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முயன்ற போது, அங்கிருந்த ஒருவர் அவருக்கு உதவி செய்வதுபோல, ஆனந்தனின் ஏ.டி.எம்., கார்டு, பின் நம்பரை பெற்று, பணம் எடுத்து கொடுத்தார்.

பின், ஏ.டி.எம்., கார்டை ஆனந்தனிடம் கொடுத்தார். ஆனந்தன் வீடு திரும்பிய பின், மொபைல்போனை பார்த்த போது, அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக பல குறுந்தகவல்கள் இருந்தன. அதிர்ச்சியடைந்த ஆனந்தன், தன்னிடமிருந்த ஏ.டி.எம்., கார்டை பார்த்தபோது, அது அவருடையது இல்லை என, தெரிந்தது.

அவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 11 லட்சம் ரூபாய் எடுத்திருப்பது தெரியவந்தது. உதவி செய்த நபர், கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார். அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement