மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை: 3 மடங்கு அதிகரிப்பு

சென்னை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவ - மாணவியர் சேர்க்கை, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் உள்ள, 417 பள்ளிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 2025 - 26 கல்வியாண்டில் மாணவ - மாணவியர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், இந்தாண்டு புதிதாக, 22,870 மாணவ - மாணவியர் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு, 6,000 மாணவ - மாணவியர் சேர்க்கை நடந்த நிலையில், இந்தாண்டு மூன்று மடங்கு மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதாக ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்ச்சி விகிதம், தேர்ச்சி குறைவான பள்ளிகளில் உள்ள பிரச்னைகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement