குப்பை பிரச்னையால் கலவர பூமியான இச்சிப்பட்டி

பல்லடம்; திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை கொட்டும் பிரச்னையால், பல்லடம் அருகே இச்சிப்பட்டிகிராமம் கலவர பூமியாக மாறியது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், இச்சிப் பட்டி, அய்யம்பாளையம் பகுதி பாறைக்குழிகளில், திருப்பூர் மாநகராட்சி குப்பைகள் கொட்ட வந்த வாகனங்களை, அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை மீண்டும் இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பைகளை கொட்ட லாரிகள் அணிவகுத்தன.

நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சிலரை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது, திருஞானம் என்பவரின் சட்டையை கிழித்த போலீசார், அவரை கைது செய்தனர்.

போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், சுப்பாத்தாள், 55, என்பவரின் கால் முறிந்தது.

மற்றொரு பெண் மயக்கமடைந்தார். இந்த களேபரத்துக்கு மத்தியில், ஜோதிமணி, 32, என்பவர், கையில் வைத்திருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.

அவரை போலீசார் தடுத்தனர். கால் முறிவு ஏற்பட்ட பெண், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விவசாய சங்க நிர்வாகிகள் பலரும் சம்பவ இடத்துக்கு வந்து கண்டனம் தெரிவித்தனர்.

மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் மங்கலம் இன்ஸ்பெக்டர் ஆகியோரை சுற்றி வளைத்து பெண்கள், பொதுமக்கள், கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.

இதனால், குப்பை லாரிகள் அங்கிருந்து கிளம்பின. விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இந்த இடம் அருகே சூலுார் விமானப்படை தளம் உள்ளதால், விமானப்படை அதிகாரிகளும் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, சம்பவ இடத்திற்கு வந்தனர். குப்பை பிரச்னையால் இச்சிப்பட்டி கிராமமே நேற்று கலவர பூமியாக காட்சியளித்தது.

Advertisement