போலீசார் தள்ளி விட்டதில் மூதாட்டி இறந்ததாக புகார்

நாகர்கோவில்; காதல் விவகாரத்தில் இளைஞரை பிடிக்க சென்ற இடத்தில், மூதாட்டியை போலீசார் தள்ளி விட்டதில், அவர் இறந்ததாக, உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே மத்திக்கோடு பாம்புரி வாய்க்காலை சேர்ந்தவர் சாகித் ஷெட்டி, 20; தொழில்நுட்ப கல்லுாரி மாணவர். திங்கள்சந்தையை சேர்ந்த அழகுக்கலை படிக்கும் மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஏற்கனவே திருமணமானதை மறைத்து, அந்த பெண் சாகித் ஷெட்டியுடன் பழகியுள்ளார். இவர்கள், பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்த நிலையில், இரு வீட்டாருக்கும் தெரிந்ததால் வீடுகளை விட்டு வெளியேறினர்.

பெண்ணின் கணவர், மனைவி மாயமானதாக போலீசில் புகார் அளித்தார். திருநெல்வேலியில் அப்பெண்ணை இரணியல் போலீசார் மீட்டனர். ஆனால், கணவருடன் செல்ல மறுத்தார்.

இந்நிலையில், பெண்ணுடன் பழகிய போது எடுத்த படங்களை சாகித் ஷெட்டி சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். நேற்று அதிகாலை சாகித் ஷெட்டியை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.

அவரை பிடிக்க முயன்ற போது, அவரது பாட்டி சூசை மரியாள் தடுத்தார். அப்போது கீழே விழுந்த சூசைமரியாள் இறந்தார். போலீசார் தள்ளி விட்டதில் அவர் இறந்ததாக சர்ச்சை எழுந்ததால், உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement