நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் கும்மிருட்டு: தெருவிளக்கு அமைக்கப்படுமா

விருதுநகர்; விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் கும்மிருட்டு அதிகரித்துள்ளதால் பாதசாரிகள், பணிமுடிந்து வீடு திரும்புவோர் அச்சத்துடனே செல் கின்றனர்.

விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடுகளில் தெருவிளக்குகள் இல்லை . புறநகர்ப்பகுதிகளில் பிரச்னை என்றாலும், நகர்ப்பகுதிகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது. நகரின் விரிவாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெருவிளக்குகள் அத்தியாவசியமானவையாக உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் தைரியமாக செல்ல முடியும். ஆனால் தற்போதோ வாகன வெளிச்சத்தை அடிப்படையாக கொண்டு பாதசாரிகள் சர்வீஸ் ரோட்டில் நடக்க வேண்டி யுள்ளது.

விருதுநகர் நுழையும் இடமான அரசு போக்குவரத்து பணிமனை அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டில் தெருவிளக்குகள் அறவே இல்லாததால் பாதசாரிகள் பணிமுடிந்து திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து பல ஆண்டுகளாக புகார் உள்ளது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது அலட்சியம் செய்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தப்பட்ட காரணத்தால் நகராட்சி நிர்வாகமும் பராமரிப்பு செய்ய வேண்டியிருப்பதால் தன்னார்வ அமைப்புகள், நகராட்சி நிர்வாக ஆணையரகத்திடம் கோரிக்கை வைத்து தன்முனைப்பில் அமைக்க உள்ளது.

நிதி இன்னும் ஒதுக்காததால் திட்டப்பணிகள் துவங்கவில்லை. சர்வீஸ் ரோட்டில் தெருவிளக்கு போடுவது நகராட்சியா, தேசிய நெடுஞ்சாலை ஆணையமா என நீண்ட விவாதத்திற்கு பிறகு, தற்போது நகராட்சி தானாக முன் வந்துள்ளது. இருப்பினும் தாமதம் தொடர்கிறது. எனவே நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு தெருவிளக்குகளை விரைந்து ஏற்படுத்தி வெளிச்சத்தை அதிகப்படுத்தி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement