ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு கொடிவேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோபி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நான்காவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பதால், கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளனமானோர் குவிகின்றனர். பவானிசாகர் அணையில் இருந்து கடந்த, 27ல், வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி, உபரிநீர் திறந்ததால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அன்று முதல் கொடிவேரி தடுப்பணைக்குள் நுழையவும், குளிக்கவும், பரிசல் பயணம் செல்லவும், நீர்வள ஆதாரத்துறை சார்பில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த, 28ல், வினாடிக்கு, 14,963 கன அடியும், நேற்று முன்தினம், 4,083 கன அடியாகவும் நீர்வரத்து குறைந்தது. அந்த வரிசையில் நேற்று காலை 8:00 மணிக்கு, 2,423 கன அடியாக குறைந்தது. ஆனால் நான்காவது நாளாக தடை நீடித்ததால், கொடிவேரி தடுப்பணையின் நுழைவு வாயில் முதல், பரிசல் துறை வரை சுற்றுலா பயணிகளின்றி நேற்றும் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement