விருதை தொகுதியில் மீண்டும் பிரேமலதா போட்டி? விஜய பிரபாகரன் சூசகம்

க டந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க., தனித்துப் போட்டியிட்டாலும், வடமாவட்டத்தில் பா.ம.க.,வின் கோட்டையான விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு, சரித்திர வெற்றி பெற்றார்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு சினிமா நடிகராக விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். இது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பேசும் பொருளாக மாறியது.

அதன்பின், 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றிபெற்ற விஜயகாந்த், 29 எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரானார். இது தே.மு.தி.க., துவங்கிய குறுகிய கால வெற்றியாக அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.

ஆனால், அடுத்தடுத்த தேர்தல் கூட்டணி, விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க., கரைந்து, அதளபாதாளத்திற்கு சென்றது. இதனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாஜி எம்.எல்.ஏ.,க்கள் பலரும் தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் தேசிய கட்சிகளுக்கு தாவினர். விஜயகாந்த் மறைவு அக்கட்சிக்கு பேரிழப்பை கொடுத்தது.

இந்நிலையில், விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேப்பூரில் நடந்த கட்சி நிர்வாகியின் இல்ல விழாவிற்கு வந்த விஜயகாந்த் மகனும், இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன், 2026 சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியாக இருந்தாலும் விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டியிடுவார் என்று தெரிவித்து சென்றார்.

இது குறித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறுகையில், ' விஜயகாந்த் மறைவுக்கு பிறகு கட்சியினர் யாருக்கும் பயம் இல்லை; கேள்வி கேட்க ஆளில்லாத நிலையே கட்சியில் தொடர்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தலைமையிடம் முக்கியத்துவம் கிடைக்கிறது.

இதனால் தான், கடந்த சட்டசபை தேர்தலில் பொதுச் செயலாளர் பிரேமலதா டிபாசிட் கூட வாங்க முடியாமல் போனது. நிர்வாகிகளின் ஒற்றுமையான பங்களிப்பு அவசியமாகிறது.

ஆனால் விருத்தாசலம் தொகுதியில் நிர்வாகிகள் பலர் குழுக்களாக இணைந்து, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி, தலைமையிடம் புகார் கூறுகின்றனர்.

இதனால் தொகுதியில் கட்சி வளர்ச்சி பாதிக்கிறது. விஜயபிரபாகரன் கூறியதை நிறைவேற்ற தொண்டர்கள் உழைப்பு மட்டும் போதாது; நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

Advertisement