ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து மறியல் போராட்டம் முதல்வர் படங்களை சாலையில் வீசிய தி.மு.க.,வினர்

கெங்கவல்லி, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள், தி.மு.க., உறுப்பினர் அட்டைகள், முதல்வர் ஸ்டாலின் படங்களை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சுவேத நதியில் இருந்து இலுப்பை தோப்பு, கெங்கவல்லி நகர் வழியே, நடுவலுார் ஏரிக்கு ஓடை செல்கிறது. அதில் செல்லும் நீர் மூலம், நடுவலுார் உள்பட, 3 ஏரிகள், பாசன வசதி பெறுகின்றன. 2024ல், அந்த ஓடையில், 4 கி.மீ.,க்கு கான்கிரீட் மற்றும் நீர் வழிப்பாதை புனரமைப்பு பணி மேற்கொள்ள, நீர் வளத்துறை மூலம், 3.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணி தொடங்கப்பட்டது. கெங்கவல்லியில் ஓடை கரை மீது, 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்ததால், 3 மாதங்களுக்கு முன் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன், அப்பணியை மேற்கொள்ள விவசாயிகள், இரு நாட்களுக்கு முன், கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். தொடர்ந்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தார் நாகலட்சுமி உத்தரவிட்டார்.
நேற்று காலை, 8:00 மணிக்கு, 'பொக்லைன்' வாகனத்துடன் நீர்வளத்துறை, வருவாய்த்துறையினர், கெங்கவல்லி போலீசாருடன் சென்று, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 5 வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, காலை, 8:30 மணிக்கு, ஆத்துார் - கெங்கவல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
உறுப்பினர் அட்டை
தொடர்ந்து, தி.மு.க., பேரூர் அவைத்தலைவர் சிங்காரம் தலைமையில் மக்கள், தி.மு.க., உறுப்பினர் அட்டைகள், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோரது உருவ படங்களை, சாலையில் வீசினர். அப்போது, 'முதல்வர், கலெக்டர், அமைச்சர்களிடம் மனு கொடுத்தும் பலனில்லை' என கோஷம் எழுப்பினர்.
தாசில்தார் நாகலட்சுமி பேச்சு நடத்தினார். அப்போது, '40 வீடுகளில், அரசு பணியில் இல்லாத, 31 பேருக்கு, ஒதியத்துார் பிரிவில் தலா, 900 சதுரடியில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஓடை பணி மேற்கொள்வதால், இடத்தை காலி செய்ய வேண்டும்' என, வருவாய்த்

துறையினர் கூறினர். ஆக்கிரமிப்பாளர்கள், 'எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கினால், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்வோம்' என்றனர்.

தாசில்தார், 'ஒரு வாரத்துக்கு பின் மற்ற வீடுகள் அப்புறப்படுத்தப்படும்' என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சிங்காரம் உள்பட, 22 பேர் மீது அரசு பணியை தடுத்தல், முதல்வர் படத்தை அவமரியாதை செய்தல் உள்பட, 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement