வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

கடலுார்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகள் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து, புதுப்பித்து ஐந்தாண்டுகளுக்கு மேல், வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு அரசு உதவித் தொகை வழங்குகிறது.

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதிற்குள்ளும், மற்ற இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதி உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக விண்ணப்பம் பெறலாம்.

அனைத்து கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிந்தால் போதுமானது.

பொறியியல், மருத்து வம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்பு படித்தவர்கள் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற முடியாது.

Advertisement