எம்.எல்.ஏ.,க்களிடம் குறை கேட்டறிந்த முதல்வர்

பெங்களூரு, : எம்.எல்.ஏ.,க்களின் நம்பிக்கையை பெறும் வகையில் நேற்று மைசூரு உட்பட பல மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் குறைகளை, முதல்வர் சித்தராமையா நேற்று கேட்டறிந்தார்.
'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் குறைகள் கேட்கப்படும் என, முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இதன்படி, பெங்களூரு விதான் சவுதாவில் அவரது அலுவலகத்தில், நேற்று மாலை 5:30 மணி முதல் இரவு 9:45 மணி வரை எம்.எல்.ஏ.,க்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முதலில் மைசூரு மாவட்டமும் தொடர்ந்து சாம்ராஜ்நகர், துமகூரு, குடகு, ஹாசன், தட்சிண கன்னடா மாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்களிடம் தனித்தனியாக நேரம் ஒதுக்கி குறைகளை கேட்டார். ஒவ்வொரு மாவட்ட எம்.எல்.ஏ.,க்களையும் முதல்வர் சந்தித்தபோது, சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் இருந்தார். மாவட்டங்கள் வாரியாக நடந்து வரும் பெரியளவிலான பணிகள், விவசாய நடவடிக்கைகள், ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவழிக்கப்பட்டது, பணிகள் எப்போது முடியும்; தொகுதி வாரியாகவும், துறை வாரியாகவும் விடுவிக்கப்பட்ட மானியங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தியது; எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள்; செய்ய வேண்டிய முக்கிய பணிகள் உட்பட பல தகவல்களை கேட்டறிந்த முதல்வர், அதற்கான ஆலோசனை, வழிமுறைகளை வழங்கினார்.
மேலும் வாக்குறுதி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவதால், மாவட்ட பொருளாதாரத்தில் ஏற்படும் நேர்மையான தாக்கம் குறித்து தகவல் தெரிவித்த முதல்வர்; ஒவ்வொரு தொகுதிக்கும் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மேம்பாட்டுப் பணிகளை அரசு வழங்கி உள்ளது. தொகுதி மக்கள், பயனாளிகளின் வீட்டு வாசலில் இவற்றை வழங்கவும், அவர்கள் பயனாளிகளுடன் தொடர்பில் இருக்கவும் அறிவுரை வழங்கினார்.
“கே.டி.பி., கர்நாடக மேம்பாடு திட்டத்தின் கூட்டத்தில், பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். அதில் மக்கள் பிரச்னைகள், தொழில்நுட்ப சிக்கல்கள், அதிகாரிகளின் அலட்சியம் போன்றவை விவாதிக்கப்பட்டு, தீர்வு காண வேண்டும்,” என, முதல்வர் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறுவதை, முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ ராயரெட்டி குறிப்பு எடுத்துக் கொண்டார். துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று பீதர், கலபுரகி, யாத்கிர், ராய்ச்சூர், கொப்பால், விஜயநகரா, பல்லாரி, பெலகாவி, ஹூப்பள்ளி - தார்வாட், உத்தர கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் குறைகளை முதல்வர் கேட்கிறார்.
மேலும்
-
'இ - நாம்' பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் கமிட்டிகளில் வியாபாரிகள் ஸ்டிரைக்
-
புதுச்சேரி தலைமை செயலக ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு
-
வீடு புகுந்து கொள்ளை முயற்சி 4 மலேஷிய நாட்டினர் கைது
-
மேட்டூர் அணை நீர் திறப்பு 50,000 கன அடியாக குறைப்பு
-
ஓசூர் கோவில் நிலம் ஏல அறிவிப்பை ரத்து செய்தது அறநிலையத் துறை
-
முன் விரோதத்தில் முதியவர் கொலை