புதுச்சேரி தலைமை செயலக ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு

புதுச்சேரி:புதுச்சேரி தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, கூனிச்சம்பட் டையை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் மணிகண்டன், 2010ல், ஐந்தாம் வகுப்பு படித்தபோது, வீட்டின் அருகே முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மின்கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
இழப்பீடு கேட்டு, சிறுவனின் பெற்றோர் புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 9 லட்சத்து 70,000 ரூபாய் இழப்பீடு வழங்க, மின்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.
எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், மின்துறை முறையீடு செய்தது. அதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி, உடனடியாக இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனாலும், இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.
சி றுவனின் பெற்றோர் மீண்டும் புதுச்சேரி கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயந்தி, இழப்பீடு வழங்காததால் தலைமை செயலகத்தை ஜப்தி செய்து இழப்பீடு பெற, நேற்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, வட்டியுடன், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற, கோர்ட் அமீனா அம்பி, செல்வராஜ் ஆகியோர், நேற்று புதுச்சேரி தலைமை செயலகம் வந்து, ஜப்தி செய்ய முயன்றனர்.
அவர்களிடம், சட்டத்துறை செயலர் பேச்சு நடத்தினார். ஆக., 5க்குள் இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று, அமீனா மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சென்றனர். தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.