ஓசூர் கோவில் நிலம் ஏல அறிவிப்பை ரத்து செய்தது அறநிலையத் துறை

'ஓசூரில் உள்ள சிவசுப்பிரமணிய கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஏலம் விடும் அறிவிப்பு, ரத்து செய்யப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாஸ்கர் தாக்கல் செய்த மனு:

கி ருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிவசுப்பிரமணிய திருக்கோவிலுக்கு சொந்தமான காலி நிலத்தை, பொது ஏலம் விட, கடந்த 3ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியானது. அறநிலையத்துறை சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, இந்த ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஏல அறிவிப்பு சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெகன்நாத் ஆஜராகி, 'எந்த கருத்தும் கேட்காமல், ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்த மாதிரியான நிலம் ஏலத்தில் விடப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சட்ட விதிகளுக்கு மாறாக, பொது ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது' என்றார்.

அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, 'பொது ஏலத்தில் அதிகமானோர் பங்கேற்க, உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்ததால், கடந்த 3ம் தேதி வெளியான ஏல அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டத்துக்குட்பட்டு புதிய ஏல அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

- நமது நிருபர் -

Advertisement