கணவரை கொலை செய்த மனைவி ஓராண்டுக்கு பின் கள்ளக்காதலனுடன் கைது

தாவணகெரே : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி உட்பட மூன்று பேர், ஓராண்டுக்கு பின் கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.

தாவணகெரே மாவட்ட எஸ்.பி., உமா பிரசாந்த் அளித்த பேட்டி:

தாவணகெரே மாவட்டம், அன்னாபுராவை சேர்ந்தவர் லிங்கப்பா, 42. இவரது மனைவி லட்சுமி, 38. கடந்த 2024 ஜனவரி 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற லிங்கப்பா, அதன் பின் வீட்டுக்கு வரவில்லை.

அதே மாதம் 31ம் தேதி ஹொன்னாளி போலீஸ் நிலையத்துக்கு சென்ற லட்சுமியின் தாய் மாலம்மா, 'என் மகள் லட்சுமியை, ஜன., 27ம் தேதி முதல் காணவில்லை' என்று புகார் அளித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், கணவன், மனைவி இருவரும் காணாமல் போனது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.

லிங்கப்பாவின் மனைவி லட்சுமி, கேரளாவில் வசிப்பதாக சமீபத்தில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், திப்பேஷ் நாயக் என்பவருடன் வாழ்ந்து வந்த லட்சுமியை அழைத்து வந்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்:

லட்சுமி - லிங்கப்பாவுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. பாக்கு தொழில் செய்து வரும் லிங்கப்பாவுக்கு, பாக்கு விளைவிக்கும் திப்பேஷ் நாயக், 42, அறிமுகம் கிடைத்தது.

அவ்வப்போது லிங்கப்பா வீட்டுக்கு திப்பேஷ் நாயக் வந்து சென்றார்.

நாளடைவில் லட்சுமிக்கும், திப்பேஷ் நாயக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதன் மூலம், லட்சுமி கருவுற்றார். இதையறிந்த லிங்கப்பா, லட்சுமியின் வயிற்றில் உதைத்ததில், கரு கலைந்தது. கோபத்தில் இருந்த லட்சுமி, லிங்கப்பாவை கொல்ல திட்டமிட்டார்.

அவரது திட்டப்படி சம்பவ தினத்தன்று, லட்சுமி, தன் தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதே நாள், திப்பேஷ் நாயக், அவரது நண்பர் சந்தோஷ், 29, ஆகியோர் லிங்கப்பாவை மது அருந்த நல்லுாரில் உள்ள மதுக்கடைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்தனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் இருந்த லிங்கப்பாவை, பத்ரா கால்வாயில் தள்ளி விட்டு, தப்பிச் சென்றுவிட்டனர்.

திப்பேஷ் நாயக்கும், லட்சுமியும், 2024 ஜன., 27ம் தேதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல், கேரளாவுக்கு சென்று, அங்கு கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

லட்சுமி, திப்பேஷ் நாயக், சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். கால்வாயில் தள்ளிவிடப்பட்ட லிங்கப்பாவின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement