நடுவானில் இயந்திர கோளாறு: இரண்டரை மணி நேரம் சுற்றிய விமானம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி புறப்பட்ட, 'போயிங் 787 - -8 ட்ரீம்லைனர்' விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. எரிபொருள் அதிகம் இருந்ததால், இரண்டரை மணி நேரம் வானில் வட்டமடித்த பின், இந்த விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த, போயிங் நிறுவனத்தின் 787 - 7 ட்ரீம்லைனர் விமானம், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் சமீபத்தில் விபத்துக்குள்ளானது. ஏர் - இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மருத்துவக் கல்லுாரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. இதில், 260 பேர் உயிரிழந்தனர்.

புறப்பட்ட உடனேயே, விமானிகள், விமான கட்டுப்பாட்டு அறைக்கு, 'மே டே' அழைப்பு விடுத்தனர். ஆனால் காப்பாற்றுவதற்குள் விபத்து நடந்தது.

'மே டே' என்பது மிகவும் அவசரமான சூழ்நிலை அல்லது நிலைமை கைமீறிச் சென்றதை விமானிகள் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் வார்த்தையாகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றும் இதேபோன்ற சூழ்நிலையை சந்தித்தது. வாஷிங்டனில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்குப் புறப்பட்ட, போயிங் 787 - 7 ட்ரீம்லைனர் விமானம், 5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க இன்ஜின் பழுதானது.

விமானிகள், 'மே டே' அழைப்பை ஏற்ற விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தில் எவ்வளவு எரிபொருள் இருக்கிறது என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து, எரிபொருள் காலியாகும் வரையில், 6,000 அடி உயரத்தில் சுற்றி வரும்படி கூறியுள்ளனர். இதன்படி, இரண்டரை மணி நேரம் சுற்றி, எரிபொருள் குறைந்தவுடன் டல்லஸ் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement