பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு பா.ம.க., தலைவர் அன்புமணி சாடல்

கும்மிடிப்பூண்டி:பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதற்கு முதல்வருக்கு நிர்வாக திறமையில்லாததை காண்பிக்கிறது, என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.

'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில், பா.ம.க., தலைவர் அன்புமணி, நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே பேசி வருகிறார்.

நேற்று மாலை, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் கோட்டக்கரை சந்திப்பில் இருந்து மாக்கெட் வரை நடை பயணமாக சென்றார்.

மாக்கெட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் இடையே அவர் பேசியதாவது:

கும்மிடிப்பூண்டி பகுதியில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், ஏதோ ஒரு சம்பவம் போல் போலீசார் அலட்சியம் செய்தனர்.

பா.ம.க., பொருளாளர் திலகபாமா, போராட்டம் வாயிலாக அழுத்தம் கொடுத்த பின்னரே, தனிப்படை அமைத்து வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

இது தற்செயலாக நடந்த சம்பவம் கிடையாது. வாரந்தோறும் இது போன்ற சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் சிறுமியர் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இது முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறமையில்லாத ஆட்சியை காண்பிக்கிறது.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

முன்னதாக, அறிவுசார் நகர திட்டத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கையப்படுத்தும், தமிழக அரசின் திட்டத்திற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து, பெரியபாளையம் மேல்மாளிகைப்பட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

அன்புமணி பேசுகையில், ''விவசாய நிலங்களுக்கு பதிலாக வேறு மாவட்டத்தில் தரிசு நிலங்களில் அறிவு சார் நகரம் அமைக்கலாம். மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு இதில் பி.எச்.டி., பட்டம் பெற்றுள்ளது,'' என்றார்.

Advertisement