நெல்லை இளைஞர் ஆணவக்கொலை; கைதான வாலிபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

சென்னை: நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியின் மூத்த மகன் கவின் செல்வகணேஷ் 27. பி.இ. படித்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் துாத்துக்குடியில் படித்தபோது கூட படித்த மாணவியுடன் நட்பாக பழகினார். அந்த பெண் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவராக உள்ளார். பெண்ணின் தந்தை சரவணன் ராஜபாளையம் ஆயுதப்படையில் எஸ்.ஐ., யாகவும் தாயார் கிருஷ்ண குமாரி மணிமுத்தாறு ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாகவும் பணிபுரிகின்றனர். இவர்களது மகன் சுர்ஜித் 24, உள்ளார். சில தினங்களுக்கு முன், கவினை சுர்ஜித் கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்தார்.
தற்போது அவரை நீதிமன்றத்தை ஆஜர்ப்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பட்டியலின ஐ.டி.,ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை கிளப்பியது. உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
இந்த சூழலில், ஆணவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள, சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.















