4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்

1

நெய்பிடோவ் : மியான்மரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 2020ல் கடைசியாக தேர்தல் நடந்தது. இதில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி மோசடி செய்ததாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் ராணுவம் குற்றம்சாட்டியது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, 2021 பிப்ரவரியில் கவிழ்த்தது. அவசரநிலையை அறிவித்து ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மியான்மர் மக்கள் பல மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறையில் அடைத்தும் போராட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கியது. இந்த நடவடிக்கைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


அதன் பின் அரசு நிர்வாகம், நீதித்துறையை ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். கடந்த, 2024ல் தற்காலிக அதிபராகவும் பதவியேற்றார்.இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வரும் உத்தரவில் மின் ஆங் ஹிலியாங் கையெழுத்திட்டார்.இதைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்குள் பார்லிமென்டுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement