கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ

14

நாகர்கோயில்: கன்னியாகுமரியில் எஸ்எஸ்ஐ ஒருவர் ஓய்வு பெற்ற நாளில் 17 கி.மீ.,ஓடிய படியே வீட்டுக்கு சென்றடைந்தார்.


பொதுவாக அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கடைசி நாள் அன்று, பாராட்டு விழா நடத்தி கவுரவித்து காரில் அழைத்து வந்து விடுவது வழக்கம். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இது செய்யப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே இதில் வித்தியாசமாக செயல்படுவார்கள்.அந்த ஒரு சிலரில் ஒருவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ பாலகிருஷ்ணன் உள்ளார்.


இவர், கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு 1984 ல் போலீசில் பணியில் சேர்ந்தார். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து என பல பிரிவுகளில் பணியாற்றி உள்ளார். அவரின் நேர்மை மற்றும் பணி காரணமாக உயர் அதிகாரிகளின் பாராட்டையும், பொது மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர். அவருக்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டத்தில் எப்போதும் ஆர்வம் கொண்டவர்.

அவர் பணியாற்றிய கோட்டூர் போலீஸ் ஸ்டேசனில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும், வழக்கப்படி,அங்கிருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள கன்னியாகுமரி அடுத்த பூவியூரில் உள்ள வீட்டில் ஜீப்பில் அழைத்து செல்ல அதிகாரிகள் தயாராக இருந்தனர்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த பாலகிருஷ்ணன், இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீட்டிற்கு ஓடிச் செல்வதாக கூறினார். இதன்படி போலீஸ் ஸ்டேசனில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டிற்கு ஓடிய படியே சென்றார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

Advertisement