மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது; தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!

14

சென்னை; தென்காசியை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்ததாக தாய் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிக்கான நேர்முக கலந்தாய்வு சென்னையில் நேரில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த, அமுதவல்லி என்ற 49 வயதான பெண், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.

தனது மகள் சம்யுக்தா கிருபாயிணி நீட் தேர்வுக்கு பயின்றபோது பாடங்களை தனது தாயிடம் பகிர்ந்து உள்ளார். அதனால் ஏற்பட்ட ஆர்வத்தால் தாயும் நீட் தேர்வு எழுதி, 147 மதிப்பெண்கள் பெற்றார். அதேபோல், 460 மதிப்பெண் பெற்ற மகளும், மருத்துவக் கல்லூரியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

படிப்பதற்கு ஆர்வம்




இது குறித்து அமுதவல்லி கூறியதாவது: ஆர்வத்தில் தான் படித்தேன். ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த நேரத்தில் பிசியோதெரபி படிப்பு தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது தனது மகளால் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் நீட் தேர்வுக்கு நன்றாக படிக்கலாம் என நினைத்து படித்து விட்டேன். எனக்கு எனது மகள் முழு ஆதரவாக இருந்தாள். இவ்வாறு அவர் கூறினார்.


தாய்க்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து சம்யுக்தா கிருபாயிணி கூறியதாவது: நான் படிக்கும் போது அம்மாவிடம் சொல்லிக் கொண்டே படிப்பேன். அம்மாவுக்கும் விருப்பம் இருந்தது. என்னுடன் சேர்ந்து படித்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தாய், மகள் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்று சாதித்துள்ள நிலையில், படிப்பிற்கு, "வயது தடை இல்லை" என்பதை மாணவியின் தாய் அமுதவல்லி நிரூபித்துள்ளார். இவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Advertisement