வட இந்தியாவில் நிகழ்வது போல தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு; திருமாவளவன் வேதனை

50

சென்னை: நெல்லை மாணவன் கவின் கொலை உள்ளிட்ட ஆணவக் கொலை சம்பவங்களுக்கு, ஜாதி பெருமை அரசியல் தான் காரணம் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்.பி., திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தயக்கம் ஏன்?






அவர் கூறியதாவது;நெல்லையில் நடந்துள்ள ஆணவக்கொலை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அந்தக் கொலையில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், படுகொலை செய்த சுர்ஜித், அவரது தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். கவினின் தந்தை, சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 3 பேரின் மீதும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் தாயாரை கைது செய்வதில் போலீசாருக்கு என்ன தயக்கம் என தெரியவில்லை.


கவுசல்யா - சங்கர் விவகாரத்தில் சங்கர் படுகொலை செய்யப்பட்ட போது, நேரிடையாக அவர்கள் யாரும் தலையிடவில்லை. கூலிப்படையை வைத்து கொலை செய்தனர். ஆனால், சங்கர் படுகொலையில் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய்மாமன் உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்தனர். அதன் அடிப்படையில் தான் கவினின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.,டி., விசாரணைக்கு மாற்றியுள்ள நிலையில், அவர்கள் நேர்மையாக நடந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஜாதி பெருமை அரசியல்






தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல வட, மேற்கு மாவட்டங்களிலும் கூட பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜாதியவாத சக்திகளும், மதவாத சக்திகளும் ஜாதி பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஜாதி பெருமிதத்தின் அடிப்படையில் இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர். வட இந்திய மாநிலங்களில் தான் இதுபோன்ற படுகொலைகள் நடக்கும். இது தமிழகத்தில் தற்போது அதிகரித்துள்ளன. இது ஜாதியவாத சக்திகளும், மதவாத சக்திகளும் திட்டமிட்டு பரப்புகிற ஜாதி பெருமை அரசியல் தான் காரணம். இதனை தடுப்பதற்கு தேசிய அளவில் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஜனநாயக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


தமிழக அரசு மீது அதிருப்தி






மத்திய அரசும் இந்தக் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. தமிழகம் உள்பட மாநில அரசுகளும் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு, ஆவணக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்றலாமா? என்று கடிதம் எழுதியுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கருத்து சொல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஆணவக் கொலை தொடர்பாக சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளார்கள். அந்த வழிகாட்டுதல்களை கூட தமிழகம் உள்பட பிற மாநிலங்கள் பின்பற்றவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.


இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயன்றோம். ஆனால், அவரை சந்திக்க முடியாததால், அவரது துறையில் மனு கொடுத்துள்ளோம்.


ரஷ்யாவில் படிக்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவன், கடலூரைச் சேர்ந்த கிஷோர், பொய் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரைக் கட்டாயப் படுத்தி, போர் பயிற்சி அளித்து, உக்ரைனுக்கு எதிரான போர் முனையில் நிறுத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அவரை மீட்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மனு அளித்துள்ளோம்.


சட்டம் அவசியம்





எஸ்.சி., பி.சி., எனும் அடிப்படையில் ஆணவக் கொலைகள் நடப்பதில்லை. ஓ.பி.சி., சமூகத்தினரிடையே கூட ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தாலும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன. எனவே, இது ஒரு சமூகப் பிரச்னை. தேசிய அளவிலான பிரச்னை, தேசிய அளவில் சட்டத்தை கொண்டு வருவது தான் கோரிக்கை, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement