எண்கள் சொல்லும் செய்தி

24.60
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் வயர்லெஸ் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 24.60 லட்சம் அதிகரித்துள்ளதாக தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் மொத்த வயர்லெஸ் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 117.08 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் சந்தாதாரர் எண்ணிக்கை 0.47 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புறங்களில் 0.10 சதவீதம் குறைந்துள்ளது.
87
ரூபாய் மதிப்பு சரிவை குறைக்க, டாலர் விற்பனையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் 87.80 ரூபாயாக சரிந்துள்ளது. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று 89 பைசா சரிந்து கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச ஒரு நாள் சரிவை பதிவு செய்துள்ளது.
22.21
கடந்த 2019 - 20 முதல் 2024 - 25 நிதியாண்டு வரையிலான காலத்தில், 22.21 லட்சம் கோடி ரூபாய் செஸ் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதே காலத்தில், செஸ் வரி வசூலில் இருந்து 24.29 லட்சம் கோடி ரூபாய், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.