அ.தி.மு.க., அழுத்தத்தால் தான் அஜித்குமார் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது: பழனிசாமி பேட்டி

திருப்புவனம்:போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக்கு அ.தி.மு.க.,வின் அழுத்தம் காரணமாகவே சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது என பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

போலீசார் விசாரணையில் இறந்த அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமாரை நேற்று காலை நேரில் சந்தித்து பழனிசாமி ஆறுதல் கூறினார். அ.தி.மு.க., சார்பாக ஐந்து லட்ச ரூபாய் காசோலை நிதி உதவி வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையால் உயிர் பறிபோயுள்ளது. ஜூன் 28ம் தேதி போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்த செய்தியை கேட்ட உடன் அ.தி.மு.க., சார்பில் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினோம், அ.தி.மு.க.,வின் அழுத்தத்தால் வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அஜித்குமார் உடலில் 44 இடங்களில் காயம் இருந்துள்ளது.

இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், தி.மு.க., பதவியேற்ற உடனேயே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. காவல் துறை உயரதிகாரிகளுக்கு அஜித்குமார் இறப்பு தெரிந்தும் அதனை நீர்த்துப்போக செய்யும் பணியில் ஈடுபட்டனர், இவ்வாறு அவர் கூறினார்.

கீழடியில் பழனிசாமி: கீழடி அருங்காட்சியகத்தை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று காலை பார்வையிட்டார். அவரை கீழடி அகழாய்வு தள இணை இயக்குனர் அஜய், அருங்காட்சியக மேற்பார்வையாளர் மேகநாதன் வரவேற்றனர்.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்ட பின் கூறியதாவது: கீழடியை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அகழாய்வு அ.தி.மு.க., ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. கீழடி என் தாய்மடி என அறிவித்ததும் அ.தி.மு.க., ஆட்சியில் தான். அருங்காட்சியகம் கட்டப்படுவதற்கு இடம் தேர்வு செய்து கட்டட பணிகள் தொடங்கியதும் அ.தி.மு.க., ஆட்சியில் தான்.

தற்காலிகமாக மதுரை தமிழ்ச்சங்கத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தியதும் அ.தி.மு.க., ஆட்சியில் தான், அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் மத்திய அரசு எழுப்பிய கேள்வி என்ன என தெரியவில்லை. அது தெரியாமல் கருத்து சொல்ல முடியாது.

தமிழகத்தில் நடந்து வரும் 39 அகழாய்வில் 33 அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்டவை, 196 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 96ல் முதல்வர்கள் இல்லை. பல கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை.

காலிப் பணியிடங்கள் இருப்பதால் தரமான கல்வி கிடைப்பதில்லை என குற்றம் சாட்டினார்.

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லுார் ராஜூ, கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அருங்காட்சியகத்தை பழனிசாமி பார்வையிட்ட போது மதுரை பாத்திமா கல்லுாரி மாணவியர்கள் அவரை சந்தித்து உரையாடினர். மாணவிகளிடம் பேசும்போது அ.தி.மு.க., ஆட்சியமைத்த உடன் கல்லுாரி மாணவிகளுக்கு தரமான லேப்டாப் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பழனிசாமியுடன் கட்சியினரும் வந்ததால் அ.தி.மு.க., பிரமுகர் சேவியர்தாஸ் அனைவருக்கும் நுழைவு கட்டணம் செலுத்தினார்.

Advertisement