பவானிசாகர் அணையை பார்வையிட தடை

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை பொதுமக்கள் பார்வையிட, ஆண்டுதோறும் ஆடி 18ம் பெருக்கு அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட வருவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு அணை பாதுகாப்பு கருதி ஆடி 18ம் பெருக்கு அன்று பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, 2020 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகள் பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 2023, 2024 மற்றும் இந்தாண்டு அணை மேல்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அணை உதவி பொறியாளர் தமிழ்பாரத் கூறுகையில்,''பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியாக உள்ள நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. மேலும் அணை மேல்பகுதியில் தேன் கூட்டில் தேனீக்கள் அதிகளவில் உள்ளன. ஆகவே, பாதுகாப்பு கருதி ஆடிப்பெருக்கு அன்று அணை மேல் பகுதியை பார்வையிட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement