மானியத்தில் நிலக்கடலை விதை விவசாயிகளுக்கு அழைப்பு
ப.வேலுார், 'கபிலர்மலை வட்டார விவசாயிகள், மானிய விலையில் நிலக்கடலை விதை பெற்றுக்கொள்ளலாம்' என, வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கபிலர்மலை வட்டாரத்தில், தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு சங்கிலி மதிப்பு கூட்டுதல் இனத்தில் நிலக்கடலை விதைகள் வழங்கப்படுகிறது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் உடையதும், அதிக எண்ணெய் பிழிதிறனும், கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடிய நிலக்கடலை விதை, 17,000 கிலோ, கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளன. 136 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 34 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் ஒரு கிலோவிற்கு, 114- ரூபாய் மானியத்தில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 100 கிலோ விதை வழங்கப்படும்.
மேலும், எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, ஆமணக்கு பயிர்கள் செயல்விளக்கங்களுக்கு நுண்ணுாட்ட உரங்கள், இயற்கை வேளாண் இடுபொருட்கள், உயிர் உரங்கள், தார்பாலின் ஆகியவை தொகுப்பாக மானியத்தில் வழங்கப்படுகிறது. நிலக்கடலை பயிர் சாகுபடிக்கு, 128 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 32 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும், ஆமணக்குப்பயிர் சாகுபடிக்கு, 8 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 2 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் மேற்கண்ட மானியம் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.