ரயிலில் இழுத்து செல்லப்பட்ட பயணியை காப்பாற்றிய வீரர்
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்மிற்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி இழுத்து செல்லப்பட்ட பயணியை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றினார்.
கோவை-சென்னை இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை, 7:35 மணியளவில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது டீ வாங்குவதற்காக, 40 வயது வாலிபர் ஒருவர், முன்பதிவு செய்த பெட்டியில் இருந்த கம்பியை பிடித்தபடி இறங்க முற்பட்டார். ஆனால் அவரால் முடியவில்லை. இந்நிலையில் ரயிலுக்கும், பிளாட்பார்மிற்கும் இடையே அவர் இழுத்து செல்லப்பட்டார்.
இதை கவனித்த, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபீக் துரிதமாக செயல்பட்டு, பயணியை பிளாட்பார்ம் பக்கமாக இழுத்து காயமின்றி காப்பாற்றினார். இதையடுத்து, சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சவ்ரவ் குமார், அப்துல் ரபீக்கை பாராட்டி சான்றிதழ்
வழங்கினார்.
ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை வீரர், பயணியை காப்பாற்றிய, 'சிசிடிவி' காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.