பதிவுத் தபால் நிறுத்துவதால் ஏற்படும் குழப்பத்தை யார் தீர்ப்பது? வாடிக்கையாளர், மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள் ஏராளம்

1

கோவை:பதிவு தபால் சேவை ரத்து செய்யப்பட்டு, விரைவு தபால் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் வகையில் தபால் துறை எடுத்துள்ள நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிவுத் தபாலுக்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைகள், விரைவு தபாலிலும் கடைபிடிக்கப்படுமா என்பன போன்ற வழிகாட்டுதல்கள் வெளியிட, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தபால் துறையில், பதிவு தபால் சேவை, 1849 நவ., 1ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 176 ஆண்டுகள் கடந்த பின்பும், இன்றும், நீதிமன்றம், வங்கி மற்றும் அரசு துறை சார்ந்த கடிதங்கள், பதிவு தபால்கள் வாயிலாக பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகின்றன.முக்கிய ஆவணங்கள், சான்றுகளை அனுப்பும் போது, வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக பதிவு தபால்கள் இருந்து வருகின்றன. உரிய நபர்களிடம் பதிவு தபால் சேர்ந்ததா என்பதை ‛டிராக்கிங்' வாயிலாகவும் கண்டறிய முடியும். மேலும், உரிய நபரிடம் மட்டுமே பதிவு தபால் ஒப்படைக்க முடியும்.

தற்போது, செப்., 1ம் தேதியில் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்பட்டு, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளது. தபால் சேவைகளை நெறிப்படுத்துதல், கண்காணிப்பை மேம்படுத்துதல், சேவைகளை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதற்காக, இந்நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் தபால் முறையை ரத்து செய்யக்கூடாது என்பதே பெரும்பாலோரின் கருத்தாக இருக்கிறது. விரைவுத் தபால் தான் இனி வழி எனும் போது, பதிவு தபாலில் கடைபிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும், விரைவு தபாலில் கடைப்பிடிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள்

1. பதிவுத் தபாலுக்கு உரிய கட்டணம், எடை மற்றும் ஜி.எஸ்.டி., ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. விரைவுத் தபாலில், எடை, குறிப்பிட்ட துாரம் மற்றும் ஜி.எஸ்.டி., ஆகியவற்றை கணக்கில் கொண்டு, கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

புதிய நடைமுறை கொண்டு வந்தால், விரைவுத் தபாலில் கடைபிடிக்கப்படும், எடைக்கான கட்டணம், குறிப்பிட்ட துாரத்துக்கான கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., என நிர்ணயிக்கப்பட்டால், இதுவரை பதிவுத் தபாலுக்கு செலுத்தப்பட்டு வந்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வருமா?

2. உரியவர்களிடம் மட்டுமே பதிவுத் தபால்கள் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில், விரைவு தபாலில் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுமா? விரைவுத் தபாலில், பாஸ்போர்ட் உட்பட ஆவணங்கள் அனுப்பப்பட்டு, அவை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முறை, இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இதுபோல், ‛உரியவர்களிடம் தான் இந்த தபால் ஒப்படைக்க வேண்டும்' என்று, விரைவு தபால் அனுப்பும் போது என்ன மாதிரியான வழிமுறை கடைபிடிக்கப்படும்?

3. பதிவுத் தபாலில் வரும் கடிதங்கள், நான் வீட்டில் இல்லை என்றாலும், வீட்டில் இருக்கும் மனைவி வசம் ஒப்படைக்கலாம் என, ‛லெட்டர் ஆப் ஆதரைசேஷன்', தபால் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டால், உரிய நபர்கள் வீட்டில் இல்லை என்றாலும், மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்படும். அதுபோன்ற வழிமுறை, விரைவு தபாலில் கடைபிடிக்கப்படுமா? என்பன போன்ற வினாக்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தபால் துறையே இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

Advertisement