மருத்துவ காப்பீடு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட அவலம்

துாத்துக்குடி:கோவில்பட்டியில், முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகள், குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில், புள்ளியியல் துறை அலுவலக வாசல் அருகே, 50க்கும் மேற்பட்ட முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் நேற்று குப்பையில் கிடந்தன.

இதைக்கண்ட, கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா, அட்டைகளை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ காப்பீட்டு அட்டைகள், எவ்வாறு குப்பைக்கு வந்தன என்பது குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.

சமீபத்தில் கோவில்பட்டியில் நடத்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டவர்களிடம், மருத்துவ காப்பீடு வழங்க ஆவணங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பயனாளிகளுக்கு வழங்காமல், அலட்சியமாக குப்பையில் வீசி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

Advertisement