ரஷ்யாவை எச்சரிக்கும் வகையில் பிரிட்டனில் அணு ஆயுதங்களை நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா

வாஷிங்டன்:உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பிரிட்டனில் தன் அணு ஆயுதங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், 21 மாதங்களை கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தாக்குதலை நிறுத்துவதற்கு, ரஷ்ய அதிபர் புடினுக்கு 12 நாள் கெடுவும் விதித்திருக்கிறார். ஆனாலும், ரஷ்யா தொடர்ந்து உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவுக்கு தன் பலத்தை காட்டும் விதமாக, வெளிப்படையாக அமெரிக்க விமானம், அணு ஆயுதங்களை பிரிட்டனுக்கு ஏற்றிச் சென்றுள்ளது. பொதுவாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், தங்கள் அணு ஆயுதங்களின் நிலை அல்லது இருப்பிடம் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை.

இந்த நிலையில், நியூ மெக்சிகோவின் அல்புகெர்க்கியில் உள்ள கிர்ட்லேண்ட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க அணு ஆயுதக் கிடங்கில் இருந்து, பிரிட்டனின் லேகன்ஹீத் நகரத்துக்கு, கடந்த, 16ம் தேதி அமெரிக்க போர் விமானம் ஒன்று பறந்தது. அந்த விமானம், தனது இருப்பிடத்தை பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்திக் கொண்டே பறந்தது.

சி - -17 எனப்படும் அமெரிக்க விமானப் படையின் சரக்கு போக்குவரத்து விமானம் வாயிலாக, புதிய பி - 61-12 அணு குண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த, 2008க்குப் பின், முதல் முறையாக அமெரிக்கா தன் அணு ஆயுதங்களை பிரிட்டனில் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.

ஐரோப்பாவில் தனது அணுசக்தி திறனைக் குறைக்கவில்லை என்பதை ரஷ்யாவிற்கு காட்டவே அமெரிக்கா இவ்வாறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement