சிறை அதிகாரிகளை கொன்ற பயங்கரவாதியிடம் விசாரணை

5

சென்னை:கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தி, 58 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, பயங்கரவாதி டெய்லர் ராஜாவை, ஐந்து நாள் காவலில் எடுத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை, தெற்கு உக்கடம், பிலால் காலனியை சேர்ந்தவர் சாதிக் அலி என்ற டெய்லர் ராஜா, 48.

இவர், கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில், 29 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். கடந்த, 9 ம் தேதி, கர்நாடக மாநிலத்தில், தமிழக காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவரை, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி., மகேஷ் மற்றும் மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ஐந்து நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கோவை குண்டு வெடிப்பு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில், டெய்லர் ராஜா தேடப்பட்டு வந்தார்.

கடந்த 1999ம் ஆண்டு, தமிழகம் மற்றும் கேரளாவில், ஏழு இடங்களில் வெடிகுண்டு வைத்ததில், டெய்லர் ராஜா முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். ஆந்திராவில் கைதான பயங்கரவாதிகள், அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோருடன், தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

மேலும், மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் ஜெயபிரகாஷ், கோவையில் ஜெயிலர் பூபாலன் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாகவும் இவரிடம் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement