பஸ் நிலைய கடைகள் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது?: வடலுாரில் வியாபாரிகள் எதிர்பார்ப்பு

கடலுார்: வடலுார் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட 118 கடைகள் பயன்பாட்டிற்கு வருமா என வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது வடலுார் நகராட்சி. குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடலுார், பார்வதிபுரம், சேராக்குப்பம் மற்றும் ஆபத்தாரணபுரம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி பேரூராட்சியாக உருவாக்கப்பட்டது.

படிப்படியாக தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து வருவாயையும், மக்கள் தொகையையும் அடிப்படையாக கொண்டு 16.10.2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

வடலுாருக்கு பெருமை சேர்க்கும் 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலாரின் சத்திய ஞான சபை உள்ளது. இது உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் மையமாக உள்ளது.

வடலுார் நகராட்சியில் 16 ஆயிரத்து 909 ஆண்கள், 17 ஆயிரத்து 692 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 608 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வடலுார் பேரூராட்சியாக இருந்த போது 18 வார்டுகள் மட்டுமே இருந்தன. பின்னர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் 27 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டன.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தலில் வடலுார் சேர்மனாக சிவக்குமாரும், துணை சேர்மனாக சுப்புராயலு தேர்வு செய்யப்பட்டனர். இந்த நகராட்சி, போக்குவரத்து வசதிக்கேற்றார் போல் மையத்தில் அமைந்துள்ளது.

சென்னை, தஞ்சாவூர், புதுச்சேரி, சேலம், கோவை, ஈரோடு ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் மையமாக வும் உள்ளது. வடலுார் நகராட்சியின் வருவாயை பெருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்ப ட்டன.

அவற்றில் ஒன்று தான் புதிய பஸ் நிலையம். பஸ் நிலையத்தை சுற்றிலும்தான் வடலுார் முக்கிய பகுதியே அடங்கியுள்ளது. பஸ் நிலையம் 5.85 கோடி மதிப்பில் தரைதளம், முதல் தளம் என 110 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி தாய்மார்களுக்கு பாலுாட்டும் அறை, கேன்டீன், ஊழியர்கள் ஓய்வறை போன்றவை உள்ளன.

அமைச்சர் பன்னீர்செல்வம் நிதியில் இருந்து 1.10 கோடி ரூபாய் இதற்காக வழங்கினார். மொத்தம் 6.95 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நகராட்சி கடைகளில் வியாபாரம் செய்தவர்கள், வெவ்வேறு இடங்களில் கடைகளை மாற்றி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்கள் வரும் மழைக்காலத்திற்குள் கடைகள் கிடைக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement