'எச்.பி.வி.' வைரஸ் தடுப்பூசி வருவது எப்போது; அரசு மருத்துவமனைகளில் இலவச விநியோகம் வேண்டும்

மதுரை : ஆண், பெண்களுக்கான சில வகை புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் கவச மாக பயன்படும் 'எச்.பி.வி.' வைரஸ் தடுப்பூசியை இலவச விநியோகத் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து விரைந்து செயல் படுத்த வேண்டும். மத்திய அரசு இதை அறிவித்து ஓராண்டாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

'எச்.பி.வி.' வைரஸ் என்பது வைரஸ் வகைகளில் ஒன்று தான். கர்ப்பப்பை வாயில் வைரஸ் இருந்தால் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. பரிசோதனையின் போது நுாறில் 80 சதவீதம் பேருக்கு இந்த வைரஸ் இருப்பதால் 'பாசிடிவ்' என்று காட்டும். பொதுவாக நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் அந்த வைரஸ்களை உடல் செல்கள் அழித்து விடும். சில பேருக்கு தொடர்ந்து வைரஸ் இருந்தால் அது உடல் செல்களை மாற்றி புற்றுநோய் கட்டிகளாக மாற்றி விடும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆரம்பகால தொற்றை கண்டறிய 'எச்.பி.வி.,' பரிசோதனை செய்ய வேண்டும்.

பெண்களுக்கு வரும் நோய்களில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்து கர்ப்பவாய் புற்றுநோய் இடம்பெற்றுள்ளது. ஆரம்பநிலையிலேயே இதை கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம்.

கர்ப்பவாய் புற்றுநோய் மட்டுமல்ல, ஆணுறுப்பில் வரும் புற்றுநோய், மலக்குடல், தொண்டை புற்றுநோய்க்கும் இந்த எச்.பி.வி. வைரஸ் தான் காரணம். புற்றுநோயே வராமல் தடுப்பது தான் 'எச்.பி.வி.,' தடுப்பூசியின் வேலை. எனவே சிறுவர், சிறுமிகளுக்கு 9 முதல் 15 வயதுக்குள் தடுப்பூசி போடுவது நல்லது. ஏனென்றால் திருமணத்திற்கு பின் உடலுறவின் மூலம் ஆண்களிடமிருந்து பெண்களுக்கு இந்த வைரஸ் எளிதாக பரவும். சிறு வயதில் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் முதல்டோஸ், 2 மாதம் கழித்து 2வது டோஸ் தடுப்பூசி போட வேண்டும். 16 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 டோஸ் தடுப்பூசி போட வேண்டும். இத்தடுப்பூசி புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் சிறுவர், சிறுமிகளுக்கான தடுப்பூசி பட்டியலில் இதுவும் இடம்பெற்றுள்ளது.

இந்த வைரஸ் தடுப்பூசிக்கு பட்ஜெட் ஒதுக்குவதாக ஓராண்டுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. தற்போது வரை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தமிழக அரசும் செயல்படுத்துவதாக அறிவித்து நான்கு மாதங்களாகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அங்குள்ள டாக்டர்கள் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்துகின்றனர். அரசு மருத்துவமனைகளில் இந்த வசதி இல்லை, விழிப்புணர்வும் இல்லை. இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் இத்தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Advertisement