பெங்களூரின் கல்வி மையமாக சிவாஜி நகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் திட்டவட்டம்

சிவாஜி நகர் : ''சிவாஜி நகர் தொகுதி, பெங்களூரின் கல்வி மையமாக மாற்றப்படும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார்.

பெங்களூரு சிவாஜி நகர் திம்மையா சாலையில், 140 ஆண்டுகள் பழமையான அரசு தமிழ் உயர் துவக்க பள்ளி உள்ளது. கட்டடம் சிதிலம் அடைந்ததால், பழைய கட்டடத்தை முழுதும் இடிக்கப்பட்டது.

தற்போது தமிழ் வழி பள்ளியில், 10 மாணவ - மாணவியர் மட்டுமே பயின்று வருகின்றனர். சிவாஜி நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக முதன் முறையாக தேர்வான ரிஸ்வான் அர்ஷத், தன் எம் .எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து, 2.50 கோடி ரூபாய் ஒதுக்கினார். இத்தொகையில், தரை தளம், மேல் தளம் கட்டப்பட்டது.

இரண்டு தளத்திலும் தலா நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் ஆறு கழிவறைகள் அமைந்து உள்ளன. இப்பள்ளிக்கு, 'அரசு ஆங்கிலம் மற்றும் தமிழ் உயர் பிரைமரி பள்ளி' என்று பெயரிடப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் இருந்து ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் வழியில் பாடம் சொல்லித்தரப்பட உள்ளது.

பெங்களூரு ஒயிட்பீல்டில் செயல்பட்டு வரும், 'இன்வென்சர் அகாடமி' பள்ளி, இப்பள்ளியை தத்தெடுத்து உள்ளது. இப்பள்ளியையும், கல்வெட்டையும் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், இன்வென்சர் அகாடமி நிறுவனர் நுாரெய்ன் பாசல் ஆகியோர் திறந்து வைத்தனர்.

எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் பேசுகையில், ''ஏற்கனவே கூறியபடி புதிதாக கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இப்பள்ளியை தத்தெடுத்துள்ள இன்வென்சர் அகாடமி, ஏற்கனவே ராமகொண்டனஹள்ளி அரசு பள்ளியை தத்தெடுத்து, மாணவர்களுக்கு இலவசமாக கல்வி பயிற்றுவித்து வருகிறது. சிவாஜி நகர் தொகுதியில் உள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, கல்வி மையமாக மாற்றப்படும்,'' என்றார்.

விழாவில், பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தாமோதரன், செயலர் சம்பத், முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் செயலர் ஸ்ரீதரன், கோபிநாத், சமூக சேவகர் எம்.ஜி.ஆர்., ரவி, முதலியார் சங்க தலைவர் பிரகாஷ் பழனி, முன்னாள் கவுன்சிலர் ஷகில், பாரதி நகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement