சர்வதேச போட்டி வெற்றிக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

4

மதுரை: சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்கள் அடிப்படையில் 900 மதிப்பெண் வழங்கி, மாணவிக்கு மருத்துவ சீட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.



புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார் சிவக்குமார் தாக்கல் செய்த மனு: 'ஷூட்டிங் பால்' விளையாட்டு வீராங்கனையான மகள் ஹரினி, இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த பிப்.,ல் நேபாளத்தில் நடந்த ஆசிய போட்டியில் தங்கம் வென்றார். கடந்தாண்டு மார்ச்சில் டில்லியில் நடந்த முதல் உலக கோப்பை ஷூட்டிங் பால் சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்றார்.இதனால் விளையாட்டுப் பிரிவில் எம்.பி.பி.எஸ்., சீட்டுக்கு விண்ணப்பித்தார்.


பொதுவாக மருத்துவ மாணவர் சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு சர்வதேச போட்டியில் தங்கம் வென்றால் 500, வெள்ளி வென்றால் 450, வெண்கலம் வென்றால் 400, போட்டியில் பங்கேற்றால் 250 மதிப்பெண் வழங்கப்படும்.இதன் அடிப்படையில் இரு சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்கள் அடிப்படையில் 900 மதிப்பெண் வழங்க வேண்டும்.


ஆனால் ஜூலை 18ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், விளையாட்டுப் பிரிவில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றதற்காக மட்டும் 200 மதிப்பெண் வழங்கப்பட்டது. சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களுக்கு, அந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 நாடுகள் பங்கேற்காததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை.


சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது அத்லெடிக் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.ஷூட்டிங் பால், குழு போட்டி என்பதால் 7 நாடுகள் என்ற விதி பொருந்தாது. எனவே சர்வதேச போட்டிகளில் தங்கம், வெண்கலம் வென்றதற்கு 900 மதிப்பெண் வழங்கி, விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ்., சீட் வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் : மனுதாரர் மகள் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் மத்திய அரசு பணிக்கு தகுதியானவர் என மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. அவ்வாறிருக்க 7 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றால் தான் மதிப்பெண் வழங்கப்படும் என்பது சரியல்ல என்றார்.


அரசு தரப்பில், மருத்துவ மாணவர் கலந்தாய்வு முடிந்துள்ளதாகவும் யாருக்கும் இதுவரை கல்லுாரி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மனுதாரர் மகளுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பதக்கங்களுக்காக 900 மதிப்பெண் வழங்கி, அதன் அடிப்படையில் மருத்துவ சீட் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement