சென்னையில் இருந்து குவைத் கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

2

சென்னை : சென்னையில் இருந்து, குவைத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதனால், அதில் இருந்த 191 பேர் உயிர் தப்பினர்.


சென்னையில் இருந்து குவைத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று மாலை 4.05 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 185 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என 191 பேருடன் புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலே நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு, இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் நின்ற விமானம், புறப்பட்டஇடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.


பயணிகள் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டு, இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டது. இதன் பின்னர், விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் உடனடி நடவடிக்கை காரணமாக, விமானத்துக்கு ஏற்பட இருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு, 191 பேர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement