புதிய திட்டங்களுக்கு முதல்வர் பெயர் பயன்படுத்த தடை விதித்தது ஐகோர்ட் : தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: அரசின் திட்டங்களுக்கு உயிருடன் இருக்கும் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் பரபரப்பு உத்தரவு பிறப்பித்தனர். அதில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதல்வர் போட்டோ பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் கட்சியின் கொள்கைத் தலைவர்களின் போட்டோ அல்லது முன்னாள் முதல்வர் போட்டோக்களை பயன்படுத்துவது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு முரணானது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அரசு திட்டத்தின் பெயரில், உயிருடன் இருக்கும் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது சுப்ரீம் கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு விரோதமானது.
தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் போட்டோவையோ பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவதற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.
அதேசமயம், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அளித்த புகாரை தேர்தல் தேர்தல் கமிஷன் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மேல்முறையீடு
இந்நிலையில், உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தக்கார் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை அமல்படுத்தினால், ஒட்டு மொத்த திட்டத்தையே நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும். திட்டத்துக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை மாற்றியமைத்து மீண்டும் செய்ய வேண்டும். இதற்கு பல வாரங்கள் ஆகும். இதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் வீணாகிவிடும். இந்த உத்தரவை அமல்படுத்துவது பெரும் கஷ்டத்தையும் பாரபட்சத்தையும் ஏற்படுத்தும். இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படும்.
மேலும் அந்த வழக்கு, நாளை துவங்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு பொருந்தாது. உங்களுடன் ஸ்டாலின் திட்டமும் கடந்த ஜூலை முதல் செயல்படுகிறது. இது இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதை விசாரணையின் போது மனுதாரர்கள் ஒப்புக் கொண்டனர். திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் முதல்வரின் பெயரை கொண்டு இருப்பதால், அதற்கு எதிராக அவர்கள் எந்த நேரடி நிவாரணத்தையும் கோரவில்லை.
எனவே ஐகோர்ட்டின் இந்த உத்தரவை மாற்றியமைப்பதுடன், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய திட்டங்களை தற்போதைய பெயரில் தொடர அனுமதிக்க வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.










மேலும்
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'
-
குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்
-
எஸ்.டி.பி., அமைக்கும் பிரச்னை விளக்க கூட்டம் ஒத்திவைப்பு
-
மாநகராட்சி அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு