கிராமங்களில் தொழில் துவங்க உரிமம் புதிய விதிமுறைகள் நிறுத்தி வைப்பு

சென்னை:கிராம ஊராட்சிகளில், டீக்கடை உட்பட அனைத்து வகை தொழில்களுக்கும் உரிமம் பெற, ஒரே வகையான கட்டணம் நிர்ணயிப்பதற்காக கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகளை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கிராம ஊராட்சிகளில் தொழில் செய்ய, பல்வேறு உரிமங்கள், 'அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தகம் உரிமம்' என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தன. ஆறாவது மாநில நிதிக்குழு பரிந்துரைப்படி, 'வணிக உரிமம்' என்று மாற்றப்பட்டது.

மேலும், மாநிலம் முழுதும், தையல் கடை, பெட்டிக்கடை, சிறுகடை, டீக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும், தொழில் உரிமம் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், புதிய நடைமுறையை, அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கனவே பெரும்பாலான கடைகளுக்கு, தொழில் உரிம கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதன் வாயிலாக, மாநிலம் முழுதும் ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பழைய நடைமுறையில், ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு இடத்தில், 50 ரூபாய், மற்றொரு இடத்தில், 600 ரூபாய் என, கட்டணம் மாறுபட்டது.

இவற்றை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தவும், ஆண்டுதோறும் புதுப்பிக்கும் நடைமுறையை மாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையை கொண்டு வர, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.

இதில், சில மாற்றம் செய்ய வேண்டி இருப்பதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அதேநேரம், பழைய விதிப்படி தொழில் உரிம கட்டணம் வசூலிப்பது தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement