உள்நாட்டு விமான சேவையில் வேகமாக முன்னேறும் தமிழகம் கடந்த 6 மாதங்களில் 1.55 கோடி பேர் பயணம்

கடந்த ஆறு மாதங்களில் மட்டும், தமிழக விமான நிலையங்கள் வாயிலாக, 1.55 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். உள்நாட்டு விமான சேவையில் தமிழகம், 13.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், துாத்துக்குடி என, மாநிலத்தில் ஆறு விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில், சேலம் மற்றும் துாத்துக்குடி, உள்நாட்டு விமான நிலையங்கள்.

தமிழகத்தில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தேவையான அளவு விமான சேவை உள்ளது. இதுவே, சர்வதேச அளவில் போதுமானதாக இல்லை.


இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில், உள்நாடு மற்றும் வெளிநாடு என, பயணியர் வருகையில் தமிழக விமான நிலையங்கள், 1.55 கோடி பேரை கையாண்டுள்ளன. உள்நாட்டு விமான சேவையில் தமிழகம், 13.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

உள்நாட்டு சேவைகள் போலவே, வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து அதிகளவில் விமானங்களை இயக்கினால், பட்டியலில் முன்னுக்கு வர முடியும் என்கின்றனர், 'ஏவியேஷன்' வல்லுநர்கள்.

இது குறித்து, விமான போக்குவரத்து ஆராய்ச்சியாளர் எச்.உபையதுல்லா கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து, புதிய சர்வதேச வழித்தடங்களில் சேவைகளை அதிகரிக்க வேண்டும். உள்நாட்டில் தேவைக்கேற்ப சேவைகள் கிடைக்கின்றன.

புதிதாக மேற்கொள்ளப்படும் இரு தரப்பு விமான ஒப்பந்தங்களில், தமிழக விமான நிலையங்களை மத்திய அரசு சேர்ப்பது கிடையாது. இதுவும் சர்வதேச அளவில் நாம் பின்னுக்கு செல்வதற்கு ஒரு காரணம்.

சர்வதேச விமான போக்குவரத்தில், இந்திய அளவில் 15 சதவீதம் தமிழகத்தை சார்ந்து தான் உள்ளது. இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்தில், வேறு எந்த மாநிலமும் நெருங்க முடியாத அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இருந்து அதிகளவில் தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.


அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் சென்னைக்கு சேவை உள்ளது. இருப்பினும், தொழில் மற்றும் முதலீட்டை ஈர்க்க, கூடுதல் சேவைகளை அதிகரிப்பதே தீர்வாக இருக்கும்.

தமிழகத்துக்கு, 'ஏர் இந்தியா, ஆகாஷா ஏர், ஸ்பைஸ்ஜெட்' விமான நிறுவனங்கள் பெரிய சேவையை வழங்கவில்லை. இருப்பினும், உள்நாட்டு விமான சேவையில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகள், விமான நிறுவனங்களுடன் ஆலோசித்து வழிவகுத்தால், 'நம்பர் - 1' இடத்துக்கு தமிழக விமான நிலையங்கள் முன்னேற முடியும்.


இவ்வாறு அவர் கூறினார்.



@twitter@https://x.com/dinamalarweb/status/1951092469468373089twitter @quote@ மற்ற மாநிலங்களில் உள்ள தனியார் விமான நிலையங்களில் கிடைக்கும் அதிநவீன வசதி கள், சொகுசு சேவைகள், தமிழக விமான நிலையங்களில் கிடைப்பதில்லை. இதனால், மற்ற மாநில நகரங்களுக்கு சென்று, விமானத்தை பிடிக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அடிப்படை வசதியான, 'வைபை' சேவையை பயன்படுத்துவ தற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. பயணியரை கையாளும் விஷயங்களில், விமான போக்கு வரத்து துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் . - விமான பயணியர்quote


முன்னேற முடியாமல்

முடங்கியது ஏன்?

கொரோனா காலத்துக்கு முன் வரை, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விமான சேவைகள் சென்னைக்கு இருந்தன; அதன்பின், பல சேவைகள் பறிபோயின. கொரோனா பரவலுக்கு பின், மற்ற மாநிலங்களில் உள்ள பல தனியார் விமான நிலையங்கள் ராக்கெட் வேகத்தில் வளர்ந்துள்ளன.


ஆனால், சென்னை எந்த வளர்ச்சியும் அடையாமல், தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பாராமுகம் மற்றும் சென்னை ஏர்போர்ட் அதிகாரிகளின் அலட்சியமுமே காரணம் என, விமான போக்குவரத்து வல்லுநர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

நமது நிருபர்

Advertisement